

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் அணியினர் தங்களது பதவிக் காலம் முடிந்த நிலையிலும் தேர்தலை நடத்தவில்லை என எதிர்தரப்பினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதில் உறுப்பினர்களுக்கு வாக்கு இல்லை என சங்க உறுப்பினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்டப் பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைத்து ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதித்தது. வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது என நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
விஷால் அணி , பாக்யராஜ் அணி என தனித்தனியாக இரு அணிகள் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், திருச்சியிலிருந்து சென்னை வந்தவர்களை நேரில் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்றும், தபால் வாக்குகள் மட்டுமே செலுத்த முடியுமென்றும் கூறி, வாக்குரிமை மறுக்கப்பட்டதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கிடையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அரசுத் தரப்பு வாதத்தில் நிதி முறைகேடு மற்றும் சங்கத்திலிருந்து நீக்கம் குறித்த உறுப்பினர்கள் புகார்களை விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.
மேலும், ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால், அப்படி நீட்டிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு மூலம் நடத்தபட்ட தேர்தலே செல்லாது என வாதிடப்பட்டது. நடிகர் சங்கத் தேர்தல் நடைமுறைகளில் தமிழக அரசு தலையிடவில்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்திலும் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.