

சட்டப்பேரவை சம்பவம் தொடர்பாக சூலூர் தொகுதி தேமுதிக எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ தினகரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வெளியேற்றும்படி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். நானும் வேறு சில உறுப்பினர்களும் பேரவை வளாகத்தில் அமர்ந்து எங்களது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அப்போது எங்களையும் வெளியேற்றும்படி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
எங்களை சபைக் காவலர்கள் வெளியேற்றும்போது, காவலர் ஒருவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வேண்டுமென்றே என்னைச் சேர்த்துள்ளனர். எனவே, இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் நடந்த சம்பவம் தொடர்பாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனது கடமையைத்தான் அப்போது செய்துகொண்டிருந்தேன். என் மீது வழக்கு தொடரும் முன்பு பேரவைத் தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோல தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெறும் தேமுதிக எம்எல்ஏ தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். பின்னர், விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.