

நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தக் கொள்கைகளை யாரும் மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமர், சீதை ஆகியோரின் உருவங்களை ஆடையின்றி எடுத்துச் சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றி பொய்யான தகவலைப் பரப்பி, பெரியாரின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை மற்றும் கோவை காவல் நிலையங்களில் கடந்த 21-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி, நேருதாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் இன்று (ஜன.24) நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, "பெரியார் மிக முக்கியமான அடையாளம். அவரின் கொள்கைகள் மிக முக்கியமானவை. பெரியார் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தது, பத்திரிகைச் செய்திகளை அடிப்படையாக வைத்துப் பேசியதாக அவரே கூறுகிறார். எப்படி இருந்தாலும் புகாரை வைத்து சட்ட விதிகளைப் பின்பற்றி முடிவெடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
திராவிடர் விடுதலைக் கழகம் தரப்பில், "ரஜினிகாந்த் அரசியலில் ஆதாயம் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தந்தை பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறு பேசியிருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி ராஜமாணிக்கம், "ரஜினிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகாரின் மீது விசாரணை நடத்த காவல்துறைக்கு அவகாசம் அளிக்காமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதை ஏற்க முடியாது. பெரியாரின் சீர்த்திருத்தக் கொள்கைகள் மிக முக்கியமானவை. அவற்றை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். பெரியார் மிகப்பெரிய தலைவர் என்பதையும் அவரின் கொள்கைகளையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால், சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் செயல்ப்பட முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, புகாரின் மீது காவல்துறை விசாரணை நடத்த கால அவகாசம் வழங்கி அதில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் புதிய மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். அதை ஏற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மனுக்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தனர். இதை ஏற்று மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.