வங்கி கேஓய்சி விதியில் என்பிஆர் விளம்பரம்: ரூ.6 கோடியை வங்கியிலிருந்து திரும்பப் பெற்ற தமிழக கிராமம்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

வங்கியின் கேஒய்சி விதியில் என்பிஆர் ஆவணத்தையும் பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் வெளியான விளம்பரத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள வங்கியில் இருந்து மக்கள் ரூ.6 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

காயல்பட்டினம் கிராமத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் டெபாசிட் செய்திருந்த மக்கள், இந்த விளம்பரத்தால் அதிர்ச்சி அடைந்து சனிக்கிழமையிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.

கடந்த 11-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, வங்கி வெளியிட்ட விளம்பரத்தில் ரிசர்வ் வங்கி அளித்த கேஒய்சி விதிமுறையில் வங்கிக் கணக்கு தொடங்க கேட்கப்படும் ஆவணங்களில் ஒரு ஆவணமாக என்பிஆர் ஆவணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது கட்டாயமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

நாளேட்டில் இந்த விளம்பரத்தைப் பார்த்த கடற்கரை ஓர கிராமமான காயல்பட்டினத்தில் உள்ள மக்கள் தங்கள் ஊரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தாங்கள் செய்திருந்த டெபாசிட் பணத்தை கடந்த சனிக்கிழமையில் இருந்து தொடர்ந்து திரும்பப் பெற்று வருகின்றனர்.

கடந்த ஒருவாரத்தில் இதுவரை ரூ.6 கோடி வரை மக்கள் தங்கள் டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இதுகுறித்து வங்கியின் மேலாளர் மாரியப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த ஒருவாரத்தில் இதுவரை ரூ.6 கோடி பணத்தை மக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பெரும்பாலும் பெண்கள்தான் அதிகமாகப் பணத்தை திரும்பப் பெற்று, குறைந்த இருப்புத் தொகையை மட்டுமே வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த மக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்று வருகின்றனர். வங்கி அதிகாரிகள் மக்களைச் சமாதானம் செய்தும், என்பிஆர் ஆவணம் கட்டாயம் இல்லை எனக் கூறியும் மக்கள் பணத்தைத் திரும்பப் பெற்றனர்.

கடற்கரை கிராமமான காயல்பட்டினத்தில் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினரே அதிகமாக வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பணியில் இருப்பதால், வங்கி மூலம் அதிகமான பணப் பரிமாற்றம் நடக்கும்.

ஏற்கெனவே என்பிஆர், என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், வங்கியின் விளம்பரம் பணத்தைத் திரும்பப் பெற முக்கியக் காரணமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை மட்டும் ஏறக்குறைய ரூ.50 லட்சம் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in