Published : 26 Aug 2015 02:57 PM
Last Updated : 26 Aug 2015 02:57 PM

முதுமலை புலிகள் காப்பகம் இருமடங்காக விரிவடைகிறது: 367 சதுர கி.மீட்டர் வனப்பரப்பு இணைப்பு

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் ஒன்றான முதுமலை புலிகள் காப்பகம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. வடக்கு வனக்கோட்டத்தைச் சேர்ந்த 367 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய சீகூர், சிங்காரா சரகங்கள் முதுமலையுடன் இணைகின்றன.

நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை, கோவை மாவட்டத்தில் ஆனைமலை, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை, ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் என 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன.

இதில் பெரியது ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. அடுத்ததாக களக்காடு முண்டந்துறை 895 சதுர கி.மீட்டரும், சத்தியமங்கலம் 524.34 சதுர கி.மீட்டர் பரப்பளவும் கொண்டவை. இதில் சிறியது நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம். சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது முதுமலை சரணாலயம். 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் ஆசியாவின் மிக பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. மொத்தம் 321 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் கடந்த 2007-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

சிறிய பரப்பளவுடைய முதுமலையில் தமிழகத்திலேயே அதிக அளவிலான புலிகள் வசிக்கின்றன. 321 சதுர கி.மீட்டரில் சுமார் 125 புலிகள் உள்ளன. களக்காடு முண்டந்துறையில் 16-18 புலிகளும், ஆனைமலையில் 25 புலிகளும், சத்தியமங்கலத்தில் 35 புலிகளும் உள்ளன. பிற புலிகள் காப்பகங்களில் சுமார் 40 சதுர கி.மீட்டரில் ஒரு புலி வசிக்கும் நிலையில், முதுமலையில் 7 சதுர கி.மீட்டரில் ஒரு புலி வசிக்கிறது. முதுமலையில் புலிகள் வசிக்கும் அடர்த்தி அதிகமாக உள்ளதால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புலிகள் காப்பகங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி (கோர் ஸோன்) மற்றும் வெளி வட்டப் பகுதி (பஃபர் ஸோன்) என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதுமலையின் மொத்தமுள்ள 321 சதுர கி.மீட்டர் வனமும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முதுமலையை ஒட்டியுள்ள நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சீகூர் மற்றும் சிங்காரா சரகங்களை முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்க பரிந்துரைத்தார். அப்போதைய தமிழக அரசும் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி ‘தி இந்து’விடம் கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகத்துடன் சேர்க்கப்பட உள்ளது. சீகூர் மற்றும் சிங்காரா சரகங்கள் சுமார் 367 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்டவை. இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதிகள் முதுமலையில் பஃபர் ஸோனாக இருக்கும். தற்போது வடக்கு வனக்கோட்டத்திலிருந்து ஊழியர்களை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு மற்றும் நடைமுறைகள் நடந்து வருகின்றன.

மாநில அரசின் நடைமுறைகள் முடிந்த பின்னர் இந்த சரகங்கள் முதுமலை புலிகள் காப்பகமாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்படும். இதன் மூலம் உதகை அருகேயுள்ள கல்லட்டி முதல் தெங்குமரஹாடா வரையிலான வனம், முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வரும். முதுமலையில் 321 சதுர கி.மீட்டரில் 19 வேட்டை தடுப்பு முகாம்கள் உள்ள நிலையில், சீகூர் மற்றும் சிங்காரா வனங்களில் 7 முகாம்கள் மட்டுமே உள்ளன. இந்த சரகங்கள் புலிகள் காப்பகத்தில் இணைக்கப்பட்டவுடன், கூடுதல் முகாம்கள் திறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x