

கணவரை பறிகொடுத்துவிட்டு ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலிடம் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற ஜீவஜோதி, பாஜகவில் இணைந்தார்.
தனது கணவர் கொல்லப்பட்ட வழக்கில் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் சிறை தண்டனை பெற்றுத்தந்த ஜீவஜோதி, கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பாஜகவில் உறுப்பினராக இணைந்தார். இதுகுறித்த தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜீவஜோதி பாஜகவில் இணைவதற்கான விழாவுக்கு சென்னையில் 2 முறை,திருச்சியில் 1 முறை ஏற்பாடு செய்யப்பட்டு தள்ளிப்போனது.
இந்நிலையில், தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தஞ்சாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கட்சியின் மாநில பொதுச் செயலாளரான கருப்பு முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இளங்கோ முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜீவஜோதி, மாநில பொதுச் செயலாளர்,மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு மலர்க்கொத்து கொடுத்து, பாஜகவில் முறைப்படி இணைந்தார்.
அப்போது பேசிய ஜீவஜோதி, “பாஜகவில் முறைப்படி இப்போதுதான் சேர்ந்துள்ளேன். பதவி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் கட்சியின் தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டு, பாஜகவை வளர்க்க பாடுபடுவேன்” என்று கூறினார்.