

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறையாடினர். போலீஸார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் அவர்களை விரட்டியடித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள்(94), சகோதரர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் சுமார் 500 பேர் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்ற சிலரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு 9 மணி அளவில் வைகோ அங்கு வரும் வரை நீடித்தது. வைகோ கேட்டுக்கொண்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
வைகோ வீட்டில் மதிய உணவு
இந்நிலையில் கலிங்கப்பட்டி மக்கள் நேற்று காலை முதலே வைகோ வீட்டு முன்பு குவியத் தொடங்கினர். அவர்கள் அனைவருக்கும் வைகோ வீட்டில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடைபெறுவதைக் காட்டும் விதமாக வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 4 பேர் மதுபாட்டில்களை வாங்கினர். இதனை அறிந்த பொதுமக்கள், அந்த நபர்கள் வாங்கிய மதுபாட்டில்களை பறித்து கீழே போட்டு உடைத்தனர்.
ஆண்களும், பெண்களும் பெருமளவில் திரண்டதைத் தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் வைகோ போராட்டத்தை தொடங்கினார். அவரது தாயார் மாரியம்மாளும் சக்கர நாற்காலியில் போராட்டத்துக்கு புறப்பட்டார். ஆனால், நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த வைகோ, இன்று நீங்கள் வரவேண்டாம், என்று சொல்லிவிட்டார்.
பின்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வேன் மீது ஏறி மக்கள் மத்தியில் அவர் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். இந்த நேரத்தில் பி. ராமலிங்கம்(29) என்பவர் அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்து கீழே இறங்கச் செய்தனர்.
வைகோ வீட்டு முன்பிருந்து மாலை 4.15 மணி அளவில் டாஸ்மாக் கடையை நோக்கி பொதுமக்கள் புறப்பட்டனர். டாஸ்மாக் கடைக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொதுமக்களில் சிலர் போலீஸாரின் தடுப்பை மீறி கடைக்குள் புகுந்து சூறையாடினர். கடையில் இருந்த மதுபான பாட்டில் பெட்டிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு உடைத்தனர். கடையில் இருந்த பெரும்பாலான மதுபாட்டில் பெட்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.
இதனால் போலீஸார் தடியடி நடத்தினர். இருப்பினும் கூட்டத்தினர் கலைந்து செல்லவில்லை. உடனே போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். 10 ரவுண்டு கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் கூட்டத்தினர் கலைந்து ஓடினர். அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது.
வைகோ காயம்
தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சில் தானும், பொதுமக்களும் காயமடைந்திருப்பதாக வைகோ தெரிவித்தார். போலீஸார் தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மீண்டும் பழைய இடத்திலேயே திரண்டு சாலை மறியல் நடத்தினர்.
அவர்களை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், கைதாக மாட்டோம் என வைகோ கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் தொடர்ந்தது.
இதற்கிடையே திருநெல்வேலி வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உடனடியாக கலிங்கப்பட்டி வந்தார். அவரும் வைகோவுடன் வேனில் ஏறி நின்று போராட்டம் நடத்தினார்.
கலிங்கப்பட்டியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.