Published : 24 Jan 2020 08:29 AM
Last Updated : 24 Jan 2020 08:29 AM

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஜன.28-ம் தேதி சென்னையில் தொடக்கம்: பண்பு, கலாச்சார பயிற்சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தகவல்

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வரும் 28-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த ஆண்டு 30 லட்சம் பேர் கண்காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, சென்னையில் நேற்று பண்பு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி ரவிகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வரும் 28-ம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தொடங்குகிறது. 29-ம்தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

81 வகையான நிகழ்ச்சிகள்

கண்காட்சியில், தெருக்கூத்து, மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சி. நாடகம் உள்ளிட்ட 81 வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடும்பம், படிப்பு, உடல்நலம் உள்ளிட்டவை நலமாக அமைய வேண்டும் என்று தினமும் யாகம் நடத்தப்படும். மேலும், திருவிளக்கு பூஜை, சீனிவாச கல்யாணம், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கல்யாணம் உள்ளிட்டவை நடைபெறும்.

இந்த ஆண்டு `பெண்களை போற்றுவோம்' என்பதை மையக் கருத்தாக எடுத்துள்ளோம். எனவே, பெண்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் சில அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கண்காட்சிக்கு வருபவர்களின் வசதிக்காக சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலவச வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து தரப்படும். கடந்த ஆண்டு கண்காட்சிக்கு 23 லட்சம் பேர் வந்திருந்தனர். இந்த ஆண்டு 30 லட்சம் பேர் கண்காட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, பரதநாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் லதா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x