Published : 24 Jan 2020 08:26 AM
Last Updated : 24 Jan 2020 08:26 AM

டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல்

கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் மனு மீதான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை லஞ்சஒழிப்புத் துறை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘‘சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதன்மூலம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இழப்புஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக லஞ்சஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறைசார்பில் மாநில தலைமை அரசுகுற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை ஆவணங்கள் மற்றும் 200 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

அவற்றைப் படித்துப் பார்த்தநீதிபதிகள் ‘‘ஆரம்ப கட்ட விசாரணையே முழுமையான விசாரணை போல நடத்தப்பட்டுள்ளதே’’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ‘‘ஆரம்ப கட்ட விசாரணை தொடர்பாக சமீபத்தில் தெலங்கானா – எதிர் - மானாகிபேட் சர்வேஸ்வரர் ரெட்டி என்றவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆரம்ப கட்ட விசாரணைக்கு எந்த வரையறையும் கிடையாது என்றும், எந்த காலவரம்பும் கிடையாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆரம்ப கட்ட விசாரணையிலேயே தேவைப்பட்டால் சாட்சிகளை விசாரிக்கலாம் என்றும், தடயவியல் சோதனைக்கு உட்படுத்தலாம் எனவும் பல வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை தொடர்பாக கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வழிகாட்டு கையேட்டை மாற்றி தற்போதுள்ள நவீன விசாரணை யுக்திகளுக்கு ஏற்ப பல அம்சங்களை சேர்த்து, திருத்தி புதிதாக வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தக் கையேட்டின்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் அடிப்படையாக வைத்தே அமைச்சருக்கு எதிரான புகார் தொடர்பாக இந்த ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் டெண்டரில் பங்குகொண்ட யாரும் வழக்கு தொடராத நிலையில் அறப்போர் இயக்கம் இந்தவழக்கை எதற்காக தொடர்ந்துள்ளது என்பது குறித்தும், அதன் பின்புலம் குறித்தும் விரிவாக வாதிட வேண்டியுள்ளது. அதற்கு அவகாசம் தேவை’’ என்றார்.

பிப்.17-க்கு தள்ளிவைப்பு

இந்நிலையில், மாநகராட்சி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்யநாதன் மற்றும் அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர் வாதிடுவதற்காக இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்.17-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x