Published : 24 Jan 2020 08:21 AM
Last Updated : 24 Jan 2020 08:21 AM

ஜிஎஸ்டியில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்: அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்குமத்திய அரசு வழங்க வேண்டும்என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் வலியுறுத்தினார்.

இந்துஸ்தான் வர்த்தக சபை தின விழா கொண்டாட்டம், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்ட தொழிலதிபர் கே.பி.ராமசாமி, சமூகசேவைக்காக தொழிலதிபர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு ௧வுரவ விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

நாட்டில் சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில் தொழில் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், தற்போதையதொழில்நுட்ப உலகில் அனைவரும் தொழில் செய்வதற்கானவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம்அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

சமூக பங்களிப்பு வேண்டும்

எனவே, தொழில்முனைவோர் தங்கள் சிந்தனைகளை உலகளாவிய சந்தையுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மக்களுக்கு பயன்தரக்கூடிய ஒரு தொழிலை தொடங்கினால் நிச்சயமாக அவர்கள் வெற்றி பெறுவார்கள். அதேநேரம் சமூகத்துக்கும் தங்களால் முடிந்த பங்களிப்பை தொழில்முனைவோர் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் பி.ஜி.சத்குரு தாஸ், துணைத் தலைவர் சத்யநாராயணன் ஆர்.தாவே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கியதில் குறைபாடுகள் இருப்பதற்கு வாய்ப்புஉள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இதை சரி செய்து தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் விருதுகள் வழங்கப்படும். ‘தி எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ வெளியிட்ட ஜனநாயக தரக்குறியீட்டில் கடந்த ஆண்டு 41-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 51-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இந்த அறிக்கை பொருளாதார சூழலை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து, மத்திய அரசிடம் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலை மாறி, மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தை மீண்டும் மத்திய அரசு வழங்க வேண்டும். மாநிலங்களுக்கான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வுகளை மத்திய அரசு உரிய முறையில் வழங்கினால் இந்தப் பிரச்சினையை எளிதில் சரிசெய்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x