

ஜெயலலிதாவின் சொத்துகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் எஸ்.புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 103-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், கொருக்குப்பேட்டையில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:
அண்ணா வகுத்த விதிகளை பின்பற்றி ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர். அதை பின்பற்றியே ஏழை மக்களுக்கான திட்டங்களையும் தீட்டினார். எம்ஜிஆர் மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவும் பெண்கள், ஏழைகள், குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார். அந்த தலைவர்களின் ஆளுமை, நிர்வாகத் திறனை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பெற்று, நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனால்தான் தமிழகத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக தலைமைக் கழகப்பேச்சாளர் எஸ். புகழேந்தி பேசும்போது, ‘‘வற்றாத ஜீவநதிஎன்று எண்ணி தவறுதலாக, கூவம் நதியில் இறங்கிவிட்டேன். துர்நாற்றம் தாங்க முடியாமல், வெளியில் வந்து இங்கு நிற்கிறேன். தினகரன் போன்ற கொடுமையான மனிதரை எனது வாழ்நாளில் பார்த்ததில்லை.
ஆர்.கே.நகர் மக்களுக்கும்,தொகுதிக்கும் தினகரன் என்ன செய்துள்ளார். தினகரன் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொண்டார்.
மக்களவை தேர்தலில் செலவழித்த பணத்தில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் வீடு கட்டி கொடுத்திருக்கலாம்.
ஜெயலலிதாவின் சொத்துகள் அரசுடமையாக்கப்பட வேண்டும். அந்த சொத்துகள் ஏழை மக்களை போய்ச் சேரவேண்டும். அது நடக்கும் வரைமுதல்வர், துணை முதல் வரைவிடமாட்டேன்’’ என்றார்.