

மனிதன் தன் தேவை அறிந்து வாழ்ந்தால் உலகில் குழப்பங்கள் இருக்காது என்றுதிபெத் நாட்டை சேர்ந்த புத்த தத்துவ ஞானி சம்தோங் ரின்பொசே தெரிவித்தார்.
‘மைத்ரிம் போஷஸ் அறக்கட்டளை’ சார்பில் ‘குழப்பமான உலகில் நீதிநெறி, தியானம், ஞானம்’ என்ற தலைப்பிலான விவாதக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது. ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நெறியாளராக இருந்துவிவாதத்தை வழிநடத்தினார். விவாதத்தைதொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
நவீன உலகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான உடனடி தீர்வுகளை நோக்கி ஓடுகிறோம். அதன் காரணமாகவே குழப்பத்துக்கு ஆளாகிறோம். கட்டுப்படுத்த முடியாத வன்முறையை நோக்கி உலகம் செல்கிறது.
அந்த அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகளை கண்டறிவதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதற்காகவே இந்த விவாதக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் விவாதத்தில் பங்கேற்ற திபெத் நாட்டை சேர்ந்த புத்த தத்துவ ஞானி சம்தோங் ரின்பொசே பேசியதாவது:
தியானம் என்பது ஆழ்மனதை சாந்தப்படுத்தி, அதன் மூலமாக உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடியது. ஆனால் தியானம் என்பதுதற்போது வருவாய் ஈட்டும் தொழிற்சாலையாக மாறிவிட்டது.
இந்த நவீன உலகில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஆயுத உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை பெரும் சவாலாக உள்ளன. இயற்கை வளத்தைதேவைக்கு பயன்படுத்திய காலம் போய்,பேராசை காரணமாக இயற்கை வளம் தற்போது சுரண்டப்பட்டு வருகிறது. இதனாலேயே சமநிலை பாதிக்கப்பட்டு, உலகில்பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. மனிதன் தன் தேவை அறிந்து வாழ்ந்தால் உலகில் குழப்பம் நிலவாது.
முதலில் தனி மனிதனிடம் மனமாற்றம் வர வேண்டும். அப்போதுதான் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நீதிநெறிக்கான தலாய்லாமா மைய இயக்குநர் டென்சின் பிரியதர்ஷி பேசும்போது, ‘‘கல்வி முறை வெகுகாலமாக மாறாமலேயே இருக்கிறது. அதில் புதுமை இல்லை. தற்போது கல்வி என்பது மாபெரும் சந்தையாகவே மாறிவிட்டது. அந்த நிலை மாற வேண்டும். கல்வி என்பது அறநெறியை வளர்ப்பதாக இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், விருந்தினர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அனைவருக்கும் பாரதிய வித்யா பவன் தலைவர் என்.ரவி நன்றி தெரிவித்துப் பேசினார்.