Published : 24 Jan 2020 08:00 AM
Last Updated : 24 Jan 2020 08:00 AM

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அழிந்துவரும் கடல் பசுக்களை பாதுகாக்க வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மன்னார் வளைகுடா கடலில் காணப்படும் கடல் பசு.

ராமேசுவரம்

எஸ். முஹம்மது ராஃபி

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் கடல் பகுதிகளில் வாழ்ந்து வரும் அரியவகை உயிரினமான கடல் பசுக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தூத்துக்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமையைப் பெற்றது.

இந்தக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகைகடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு, டால்பின்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளன.

ஒரு காலத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பசுக்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. கடலில் ஏற்பட்ட சூழலியல் மாற்றம், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள், மனித வேட்டை ஆகியவற்றால் கடல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இதுகுறித்து பாம்பனைச் சேர்ந்த கடலியல் ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது:

ஆவுளியா என்று தமிழில் அழைக்கப்படும் இந்த மீன் இனத்தின் ஆங்கிலப் பெயர் கடல் பசு (Sea cow). மன்னார் வளைகுடா பவளப் பாறைகளுக்கு மட்டுமின்றி கடல் புற்களுக்கும் பிரசித்திப் பெற்ற பகுதியாகும். இதனால் கடல் புற்களை மட்டும் உண்டு வாழும் சைவ உயிரினமான கடல் பசுக்களின் கடைசி புகலிடமாக இந்த கடல் பகுதி மாறியதில் ஆச்சரியம் இல்லை.

70 ஆண்டுகள் உயிர் வாழும்

வெண் சாம்பல் நிறத்தில் காணப்படும் கடல்பசு அதிகபட்சம் 3 மீட்டர் நீளம் வரை வளர்ந்து, அதிகபட்சம் 400 கிலோ எடையுடன் இருக்கும். சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கடல் பசுவுக்கு முன்னங்கால்கள் போன்று தோற்றம் அளிக்கும் 2 துடுப்புகள் இருக்கும். நாசித் துவாரம் பிறைச் சந்திரன் வடிவத்தில் உச்சந்தலையில் அமைந்திருக்கும்.

அதிகபட்சம் கடலில் 30 மீட்டர் ஆழம் வரை சென்று கடல்புற்களை உட்கொள்ளும் கடல் பசு, அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கடலின் மேல்மட்டத்துக்கு வந்து காற்றை சுவாசிக்கும். கடல் பசுவின் கர்ப்ப காலம் ஓராண்டு. பெரும்பாலும் ஒரு குட்டியை மட்டும் ஈனும். குட்டி பிறக்கும்போதே மூன்றடி நீளம் இருக்கும்.

கடல் பசுவின் எதிரிகள் சுறா மற்றும் திமிங்கலங்கள். ஆனால், இவற்றைக் காட்டிலும், அதிக அளவில் மருத்துவக் குணம் கொண்டுள்ளதால் இறைச்சிக்காக கடல் பசுக்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு, அவற்றின் தோலில் இருந்து விலை உயர்ந்த ஆடைகள், பற்களில் இருந்து நஞ்சு முறிவு மருந்து, கொழுப்பில் இருந்து தைலம் தயாரிக்கப்படுகின்றன.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மற்றும் கடல் பசு வேட்டையை தடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தாவிட்டால் கடல் பசுவையும் தமிழக கடல் பகுதிகளில் வாழும் அரிய உயிரினங்கள் அனைத்தையும் எதிர்காலத்தில் பார்க்க முடியாது போகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x