Published : 24 Jan 2020 07:56 AM
Last Updated : 24 Jan 2020 07:56 AM

இயற்கை விவசாயம், உற்பத்திப் பொருள் விற்பனையை ஊக்குவிக்க உழவன் செயலியில் 3 புதிய சேவைகள் இணைப்பு: வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தகவல்

சென்னை

உழவன் கைபேசி செயலியில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ‘எனது பண்ணை வழிகாட்டி சேவை', 'இயற்கை பண்ணையம்', 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்' ஆகிய 3 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் ‘உழவன்’ கைபேசி செயலி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 5 லட்சம் பயனாளிகள் இச்செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வேளாண்மை மற்றும் இதர சகோதரத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டு, இதுவரை 88,987 விவசாயிகள் உயர் மதிப்புள்ள இடுபொருட்களை மானியத்தில் பெறும் வகையில் இந்தச் செயலி மூலம் பதிவு செய்துள்ளனர்.

‘உழவன்’ செயலி மூலம் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில், தற்போது கூடுதலாக ‘எனதுபண்ணை வழிகாட்டி’, ‘இயற்கை பண்ணையம்’ மற்றும் ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்’ ஆகியமூன்று சேவைகள் ‘உழவன்’ செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சேவை மூலம் விவசாயிகள் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ள பயிர், பரப்பு, நடவு நாள் மற்றும் சாகுபடி முறையைத் தேர்வு செய்தால், விதைப்பு முதல் அறுவடை வரை தினசரி, அந்த பயிருக்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து சாகுபடி முறைகளையும், எளிதில் அறிந்து கொள்ள முடியும். மேலும், சாகுபடிக்கு தேவைப்படும் விதை, ரசாயன உரங்கள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள் இருப்பு, பயிர்க் கடன், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை உள்ளிட்ட விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

இயற்கை பண்ணையம்

தமிழக அரசு இயற்கை பண்ணைய முறையை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி நச்சுத்தன்மையற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்ய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக செயல்படுத்தப்படும் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 15,596 ஏக்கர் பரப்பில் இயற்கை பண்ணைய சாகுபடி செய்யப்பட்டு அதில் 4,646 ஏக்கர் பரப்புக்கு பங்கேற்பு உத்தரவாத சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பரப்பும் இயற்கை பண்ணைய முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இயற்கை பண்ணைய முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பற்றி, மாநிலத்தில் உள்ள இதர விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இயற்கை பண்ணைய விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் பொருட்டு, விவசாயிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் ‘உழவன்’ செயலி இணைப்பு பாலமமாக விளங்கும்.

நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், இடுபொருட்கள், நிதிஉதவி, லாபகரமான விலையில் விற்பனை செய்வதற்கான சந்தை போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை நல்ல முறையில் சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் ‘உழவன்’ கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் மதிப்புகூட்டிய பொருட்களின் தரம், அளவு, விலை போன்ற விவரங்களை புகைப்படத்துடன் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்து சந்தைப்படுத்திக் கொள்ளலாம்.

பொதுமக்களும் இந்தச் செயலி மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகூட்டிய பொருட்களை வாங்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x