

தமிழக அரசின் டிட்கோ, டிஎல்எஃப் நிறுவனங்கள் இணைந்து ரூ.5 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சென்னை தரமணியில் அமைக்க உள்ளது. இத்திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், ஏற் கெனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை தரமணியில் தமிழக அரசின் டிட்கோ மற்றும் டிஎல்எஃப் இணைந்து 6.8 மில்லியன் சதுர அடியில் புதியதாக அமைக்க உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப பூங்கா மாதிரியை முதல்வர் மற் றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இவ்விழாவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழக அரசின் தொடர் முயற்சி களால் பல புதிய தொழில் முதலீடு களை தமிழகம் தொடர்ந்து ஈர்த்து தொழில்துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு, இது வரை ரூ.19 ஆயிரம் கோடி மதிப் பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக் கப்பட உள்ளன.
தமிழகத்தின் தொழில் வளர்ச் சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு, உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்கும் வகையில், ‘யாதும் ஊரே’ என்ற புதிய திட்டத்தை அமெரிக்காவில் நான் தொடங்கிவைத்தேன்.
இதன்மூலம் இங்கிலாந்து, அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.8 ஆயிரத்து 835 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப் பட்டன. இதனால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படவுள்ளன. தற்போது 5 நிறுவனங் கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் இதுவரை ரூ.14 ஆயிரத்து 728 கோடி மதிப்பிலான 36 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழிற்பூங்கா, மின்சார வாகனப் பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற் சாலையை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியை மேற்கொள்ள சால்காம் என்ற நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி யாக உயர்ந்துள்ளது. தற்போது தரமணியில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்த பூங்கா மூலம் 70 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற முடியும். தொழில் தொடங்க உடனுக்குடன் அனுமதி மற்றும் அனைத்து வசதி களையும் தமிழக அரசு வழங்கு கிறது. இதன்மூலம் இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழகம் உயரும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தொழில்துறை செயலாளர் நா.முருகானந்தம், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் காகர்லா உஷா, டிஎல்எஃப். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் கட்டார், தலைமை செயல்அலுவலர் மோகித் குஜ்ரால் உட்பட பலர் பங்கேற்றனர்.