

உள்ளாட்சிப் பிரதிநிகளுக்கு அதிகாரம் வழங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாம் மறக்கக்கூடாது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
முகாமினை தொடங்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, "மகாத்மா காந்தியை நாம் என்றும் மறக்கக் கூடாது. காரணம் அவர் தான் முதலில் கிராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.
இன்று பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவராக, துணைத் தலைவராக அமர்ந்திருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோரே. அதனால், அவர்களை வாழ்க்கையில் என்றும் மறக்கக் கூடாது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழி தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவர் நமது முதல்வர். அதே போல், கிராமப் புறங்களில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்.
பிரதமரே காசோலையில் கையெழுத்திட முடியாது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையெழுத்து இடக் கூடிய அதிகாரம் உள்ளது. இந்தச் சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. அவரை நாம் மறக்கக் கூடாது.
தற்போது எது நடந்தாலும் மக்கள் உடனடியாக வாட்ஸப்பில் அதை பரப்புகிறார்கள். அதனால் தலைவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும் அப்போதுதான் மக்களுக்குத் தேவையான பணிகளை நாம் செய்ய முடியும்.
இந்த நாட்டுக்கு சேவையாற்றியதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு அதை நாம் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.