Published : 23 Jan 2020 05:47 PM
Last Updated : 23 Jan 2020 05:47 PM

சென்னையில் ரூ.1.5 கோடி செலவில் 3 புதிய பூங்காக்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பளவை அதிகரித்து பொதுமக்களுக்கு இயற்கையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை அளிக்க பூங்காக்கள் மற்றும் சாலையோரங்களில் மரம், செடி, கொடிகளை அமைத்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 632 பூங்காக்கள், 99 சாலை மையத் தடுப்புகள், 99 போக்குவரத்து தீவுத் திட்டுகள் மற்றும் 163 சாலையோரப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

மேலும், இந்திய அரசாங்கம் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக அடல் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற திட்டம் (AMRUT) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் ஒரு பகுதியாக நகர்ப்புறங்களில் உள்ள பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக புதியதாக பூங்காக்கள் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மாநகரின் பசுமைப் பரப்பை அதிகப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக பூங்காக்களை உருவாக்க, (AMRUT) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாநில வருடாந்திர செயல் திட்டத்தின் கீழ் பசுமை இடங்கள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 55 பூங்காக்கள் ரூபாய் 37.74 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 2018-19 ஆம் நிதியாண்டின் ஊக்க நிதியின் மூலம் மாதவரம் மண்டலம், வார்டு-23, வி.எஸ் மணி நகர் 3-வது தெருவில் (வடக்கு) 565.20 ச.மீ. பரளப்பளவில் ரூ.48.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காவும், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111, நுங்கம்பாக்கம், ரட்லண்ட் கேட் 2-வது தெருவில் 1235.65 ச.மீ. பரப்பளவில் ரூ.53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்காவும், பெருங்குடி மண்டலம், வார்டு-188, வேளச்சேரி, ஜே.வி.நகர், எம்.ஆர்.டி.எஸ் அருகில் 724.33 ச.மீ பரப்பளவில் ரூ.48.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா என மொத்தம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பணிகள் ஆறு மாதகாலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x