

கேரள அரசு தேக்கடியில் வாகன நிறுத்தம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அம்மாநில அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடியில் அந்த மாநில அரசு சுற்றுலா மேம் பாட்டுக்காக வாகன நிறுத்தம் ஒன்றை அமைத்து வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதி வனப்பகுதி எல்லையில் வருகிறது என்றும், பெரியாறு புலிகள் சரணாலய எல்லையில் இருப்பதாகவும் கூறி இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பன், ஆப்ரகாம் தாமஸ் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கு அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அந்த இடம் கேரள அரசிடம் குத்தகை அடிப்படையில் தமிழகம் பெற்ற பகுதி என்று தமிழக அரசு வாதிட்டு வருகிறது. பணிகள் நடைபெற்ற பகுதி எத்தகையது என்று ஆய்வு செய்ய இரு நிபுணர் குழுவை அமர்வு அமைத்தது. அதன் ஆய்வறிக்கையும் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது.
அப்போது, இதே கோரிக்கையுடன் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வாகன நிறுத்தம் அமைக்க விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையையும் நீக்க வேண்டும் என்றும் கேரள அரசு சார்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இரு மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அடுத்த விசாரணையின்போது இரு மாநில அட்வகேட் ஜெனரல்களும் ஆஜராகி வாதிட இருப்பதாக தெரிவித்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட அமர் வின் உறுப்பினர்கள், ஆய் வறிக்கை தயாரிப்பதற்காக கூடு தலாக செலவான தொகை ரூ.3 லட்சத்து 49 ஆயிரத்தை இரு மாநில அரசுகளும் சம பங்காக 30 நாட்களுக்குள் அமர்வில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.