

தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு அஸ்திர ஹோமம் இன்று தொடங்கியது. இதில் 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுவதால் இதற்கான யாகசாலை பூஜை பிப்.1-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி தஞ்சையில் உள்ள எட்டு திசைகளிலும் உள்ள காளியம்மன் கோயில்களிலும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கீழவாசல் வேளாளர் தெருவில் உள்ள உக்கிர காளியம்மன் கோயில், மேல அலங்கம் வடபத்திர காளியம்மன் கோயில், வல்லம் ஏகௌரி அம்மன் கோயில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோயில், தெற்கு வீதி காளிகா பரமேஸ்வரி கோயில், வடக்கு வாசல் மகிஷாசுர மர்த்தினி கோயில், ராஜகோபாலசாமி கோயில் தெருவில் உள்ள காளியம்மன் கோயில், பூமால் ராவுத்தர் தெருவில் உள்ள வடபத்திர காளியம்மன் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகிய ஒன்பது கோயில்களில் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள நடராஜர் சன்னதி முன்பு அஸ்திர ஹோமம் இன்று (ஜன.23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. காலையில் முதல் கால பூஜையும், மாலை 4 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் காலை 12 30 மணி வரை மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. பூஜையில் சிவபெருமானின் ஐந்து ஆயுதங்களான சிவஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவற்றை ஹோமத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்படுகிறது. இதில் 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், திருக்கழுக்குன்றம் அகத்தியர் அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.