Published : 23 Jan 2020 01:22 PM
Last Updated : 23 Jan 2020 01:22 PM

இந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி - உருவாகி வரும் போக்குகள்: சென்னையில் 3 நாள் கருத்தரங்கம்

ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு முக்கியத் தலைப்பில், அகில இந்திய அளவிலான மூன்று நாள் கருத்தரங்கத்தை நடத்தும் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை 24, 25 & 26 தேதிகளில் 3 நாள் கருத்தரங்கத்தை சென்னையில் நடத்துகிறது.

இது குறித்து அனைத்திந்திய முற்போக்குப் பேரவை சார்பில் AIPF அகில இந்தியப் பொதுச் செயலாளர் அனில் ரஜிம்வாலே , அகில இந்தியச் செயலாளர் பேராசிரியர் யுகல் ராயலு , அகில இந்தியத் தலைவர் M.விஜயக்குமார், அகில இந்தியச் செயலாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் G.R.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

“அனைத்திந்திய முற்போக்குப் பேரவை (All India Progressive Forum – AIPF ), அகில இந்திய அளவில் செயல்படும் அரசியல் கட்சி சார்பற்ற அமைப்பாகும். முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கான பொது அமைப்பாகும்.

இன்றைய சமூகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதிப்பதற்கான தளமாகவும் AIPF திகழ்கிறது. மருத்துவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக அறிஞர்கள், சுற்றுச் சூழல் நிபுணர்கள் உட்பட ஏராளமானோர் இவ்வமைப்பில் இணைந்து செயல்படுகின்றனர்.

AIPF அறிஞர் பெருமக்களுக்கு மட்டுமேயான அமைப்பல்ல. மாறாக, அனைத்துப் பிரிவு மக்களும் இணைந்து செயல்படும், அறிவார்ந்த விவாதத்திற்கான பொது அமைப்பாகும்.

கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள் நல்வாழ்வு, அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல், பாலினப் பாகுபாடு, சாதியம், மதவாதம், பொருளாதாரம், தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பொருளாதார அரசியல் பிரச்சினைகளில் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை கருத்தரங்குகளை நடத்தியுள்ளது.

ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு முக்கியத் தலைப்பில், அகில இந்திய அளவிலான மூன்று நாள் கருத்தரங்கத்தை இவ்வமைப்பு நடத்தி வருகிறது. அந்த நடைமுறையைத் தழுவி, வரும் 2020 ஜனவரி 24 (நாளை), 25 & 26 தேதிகளில் சென்னையில் இந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி- உருவாகிவரும் போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்த உள்ளது. சென்னை, எழும்பூர், இக்ஸா மையத்தில் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இந்தியாவின் தனித்தன்மையாக, சாதி என்ற நச்சு மரம் இன்றும் உயிர்ப்போடு பரந்து விரிந்து நீடிக்கிறது. சாதி அடிப்படையிலான பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகள், அடக்கு முறைகள், அநீதிகள், சமூகப் புறக்கணிப்புகள், தீண்டாமைக் கொடுமைகள், உழைப்புச் சுரண்டல்கள், சாதி ஆணவக் கொலைகள் போன்றவை இன்னும் தொடர்கின்றன.

சாதியே, வர்க்கங்களாக இருந்த பண்டைய நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல்வேறு வர்க்கங்கள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு வர்க்கத்திற்குள்ளேயும் பல்வேறு சாதியினர் இடம் பெற்றுள்ளனர்.

இருப்பினும், கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களின் முதலாளிகளில் பெரும்பான்மையோர் முன்னேறிய வகுப்பினராகவே உள்ளனர். கூலி உழைப்பை நம்பி வாழும் கோடிக்கணக்கான இந்திய மக்கள் அடித்தட்டுச் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

அறிவியல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எந்திர அறிவு (செயற்கை நுண்ணறிவு- Artificial intelligence), தானியங்கி எந்திரங்கள், ரோபோக்கள், கணிணிகள், 3டி பிரிண்டிங், புதிய மின்னணு தகவல் தொழில்நுட்பம் போன்றவை சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒருபுறம் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் பங்களிப்பை அவை செலுத்தி வருகின்றன. ஆனால், மறுபுறமோ, வேலையின்மை, வேலைவாய்ப்பை ஒழித்தல், ஆட்குறைப்பு போன்றவற்றை அதிகப்படுத்தி வருகின்றன.

பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மூடச் செய்துள்ளன. கடும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போக்குகள் சமூக நீதியிலும், பொருளாதார நீதியிலும் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தனியார் துறைகளிலும், உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால், ஒடுக்கப்பட்டச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஆட்குறைப்பு நடவடிக்கைகளாலும் இவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு எட்டாக் கனியாக மாறி வருகின்றன. இந்நிலையில் இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத போக்கு நீடிக்கிறது. மாநில அரசுகள் அகில இந்தியத் தொகுப்பிற்கு ( All India quota ) வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் மத்திய பாஜக அரசால், இட ஒதுக்கீடும், சமூக நீதியும் ஒழித்துக் கட்டப்படுகிறது. பெண்களுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை.

சர்வேதேச நிதி மூலதனத்தின் லாப வெறியால், புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளால், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகள் வணிக மயமாகி வருகின்றன.பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்ற நிலை உருவாக்கப்படுகிறது.

உழைப்புச் சுரண்டல் தீவிரமடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த செல்வாதாரத்தில் 73 விழுக்காடு, உச்சமட்ட 1 விழுக்காடு பணக்காரர்களால் மட்டுமே அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த அபகரிப்பு 2014-ல் 49 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளி விவரம் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில், மத்திய கார்ப்பரேட் அரசு பாசிசத்தன்மை வாய்ந்ததாக மாறிவருகிறது. கார்ப்பரேட்கள், உயர் சாதியினர் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை அது கடைப்பிடிக்கிறது. அதற்கேற்ப, தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை உருவாக்கி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019, சமூக நீதிக்கு எதிரானது. கல்வியை காவிமயமாக்கல், கார்ப்பரேட் மயமாக்கல் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பதாக உள்ளது. குலக் கல்வி முறையையும், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழிலையும் மீண்டும் திணிப்பதாக உள்ளது. சாதி, மதம், பாலினம் மற்றும் பொருளாதார அடிப்படையிலான பாகுபாடுகளும் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய இன்றைய இந்திய நிலைமைகள், சமூக மற்றும் பொருளாதார நீதியில் கடும் எதிர்மறைத் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. இதுகுறித்து விவாதிக்கும் அரங்கமாக இந்த தேசியக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன”.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x