

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த 2 இஸ்லா மியர்கள் வங்கதேச சுற்றுலாப் பயணிகள் என்பதும், இவர்கள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப் பார்த்ததும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு 2 இஸ்லாமியர்கள் வந்தனர். கோயிலைச் சுற்றிப் பார்த்த அவர்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இவர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்றும், சதித் திட்டத்துக்காக கோயிலை படம் எடுப்பதாகவும் சமூக வலைதளங் களில் வதந்திகள் பரவின. அங்கி ருந்தவர்கள் சிலர் இது தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இவர் களின் தோற்றத்தை கண்ட காவல் துறையினருக்கும் சந்தேகம் ஏற்பட இவர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இவர்கள் கோயிலுக்கு வந்து யாரிடம் பேசினர், இவர்களுடன் யாராவது வந்தனரா, எந்த வாகனத்தில் வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல் துறையினர் சேகரித்தனர்.
கேமரா பதிவுகள் ஆய்வு
இதனைத் தொடர்ந்து காஞ்சி புரத்தில் உள்ள முக்கிய கோயில் களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே பக்தர்கள் கோயில்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், காமாட்சி அம்மன் கோயிலிக்கு வந்த இருவரும் வேறு கோயில்களுக்கு சென்றுள்ளனரா என மற்ற கோயில்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
மேலும், அவர்கள் வந்த வாகனங்களின் எண்களை வைத்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்கள் இருவரும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த கான் மற்றும் அப்துல்லா என்பது தெரியவந்தது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பான மருத்துவ சிகிச்சை கிடைப்பதால் வங்கதேசத்தில் இருந்து பலர் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். அதுபோல் இவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.
அங்கு சிகிச்சை முடிந்ததும் சென்னைக்கு அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்ததும், அப்போது காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் சுற்றுலா பயணிகள்தான் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.