அதிக நீர்வரத்தால் வீராணம் ஏரி நிரம்பியது கோடையிலும் சென்னைக்கு குடிநீர் கிடைக்கும்

அதிக நீர்வரத்தால் முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி.
அதிக நீர்வரத்தால் முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டிஉள்ளது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம்ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் மற்றும் புவனகிரி, முஷ்ணம் வட்டங்களில் சில பகுதிகள் என 44 ஆயிரத்து 850 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், இந்த ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கீழணையில் இருந்து மேட்டூர் தண்ணீர் வடவாறு வழியாக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 450 கனஅடியில் இருந்து வினாடிக்கு 1568 கனஅடி வரை தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. நேற்று வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

கோடைகாலம் தொடங்கும் நேரத்தில் ஏரி முழு கொள்ளளவில் இருப்பதால் அதனைச் சுற்றிஉள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் கோடையில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று இப்பகுதியினர் கருதுகின்றனர்.

தற்போது ஏரியில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 20 கனஅடியும், சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கோடை காலத்தில் சென்னைக்கு தொடர்ந்து குடிநீரை அனுப்பி வைக்க இயலும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in