

சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. வில்சன்கொலை வழக்கில் தொடர்புடையவருக்குப் பணப் பரிமாற்றம் செய்தவர்கள் மற்றும் தீவிரவாதஅமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என 3 பேரை தேவிபட்டினம் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் போலீஸ் எஸ்.ஐ. ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீஸார், ரகசிய தகவலின் அடிப்படையில் தேவிபட்டினத்தில் நேற்று தனியார் பள்ளி அருகே நின்றிருந்த 4 இளைஞர்களைப் பிடிக்கச் சென்றனர். அப்போது, ஒருவர் தப்பிச் சென்றார்.
அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம் என்பவருக்குப் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டிமதராஸாக்களில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
ஐஎஸ் அமைப்புகளுக்கு நிதி
மேலும், அவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்பி மதப் பிரச்சினையை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகள், இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானவர்களைக் கொன்று மக்களின் மனதில் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்த இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர ஐஎஸ் அமைப்புகளுக்கு நிதி திரட்டி வழங்க இருந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து தேவிபட்டினம் போலீஸ் எஸ்.ஐ. ஜெகதீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் கீழக்கரையைச் சேர்ந்த பிச்சைக்கனி என்ற புறாகனி(43), கீழக்கரையில் வசித்து வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர்(31), முகம்மது அலி(28) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஷேக்தாவூது(37) என்பவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர் ஏற்கெனவே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வரும் வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் ஆவார்.
2-ம் நாளாக விசாரணை
இதற்கிடையே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம்,தவுபீக்கிடம் போலீஸார் நேற்று2-வது நாளாக தீவிர விசாரணைநடத்தினர். எஸ்.ஐ. வில்சனைசுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவைஎங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்கப்படுகிறது.