

இலங்கை அருகே நிலவிவரும் காற்று சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், இலங்கை அருகே வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வடகிழக்கு திசையில் இருந்துவலுவான காற்று மணிக்கு 45 கிமீமுதல் 55 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி உதகமண்டலத்தில் 7.1 டிகிரி, கொடைக்கானலில் 9.5 டிகிரி, குன்னூரில் 11.5 டிகிரி, வால்பாறையில் 12 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப்பகுதிகளான தருமபுரியில் 17.6 டிகிரி, திருத்தணியில் 18 டிகிரி, வேலூரில் 18.7 டிகிரி, நாமக்கல்லில் 19.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.