Published : 23 Jan 2020 08:29 AM
Last Updated : 23 Jan 2020 08:29 AM

பேரவை தேர்தலுக்கு தயாராகிறது பாஜக: ஜனவரி 31-க்குள் விருப்ப மனு அளிக்க வேண்டுகோள்

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர், வரும் 31-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்குமாறு அக்கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு இன்னும் ஓராண்டுக்குமேல் அவகாசம் இருக்கும் நிலையில்முக்கிய அரசியல் கட்சிகள், இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த திமுகசெயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “2021 பேரவைத் தேர்தலில் வெற்றிபெற இப்போதிருந்தே பணிகளைத்தொடங்க வேண்டும். 2020-ம்ஆண்டு முழுவதும் உழைத்தால்தான் அதன் பலனை 2021-ல் அடைய முடியும்’’ என்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆளுங்கட்சியான அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி அமைப்பதற்கான பணிகளை திரைமறைவில் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக பாஜக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜன. 31-க்குள் விருப்ப மனுக்களை அளிக்குமாறு அக்கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் 50 சதவீத வாக்குச் சாவடிகளில் பாஜக கிளைகள் உள்ளன. நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 சதவீத இடங்களில் போட்டியிட்டு தமிழக மக்களின் கவனத்தைஈர்க்கக் கூடிய அளவில் பாஜகவென்றுள்ளது. 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க இருக்கிறோம்.

எனவே, பாஜக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து ஜனவரி31-ம் தேதிக்குள் மாநிலத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

விருப்ப மனுக்களின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை முடிவு செய்து தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. பேரவைத் தொகுதி வாரியாக கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வீடு வீடாகப் பிரச்சாரம் செய்வது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பாஜகவினரையும், பாஜக ஆதரவாளர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைப்பது, வாக்குச் சாவடி குழுக்களை அமைப்பது, மத்திய பாஜக அரசின் சாதனைகளை வீடுதோறும் கொண்டு செல்வது போன்ற பணிகளை 2020-ம் ஆண்டு முழுவதும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தமிழக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x