

நீலகிரி மாவட்டம் மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் மாயாறு யானை வழித்தடத்தில் மூடப்பட்ட ரிசார்ட்dug கள் பின்புற வழியாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகியப் பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கண்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரிசார்ட் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
மாயார் யானைகள் வழித்தடத்தில் 39 காட்டேஜ் வளாகங்கள் உள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள், வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் போன்றவைகளை அகற்றவும், அனுமதியற்ற கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் அங்கு சென்ற அதிகாரிகள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 39 கட்டிடங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு சீல் வைத்தனர். இதன் மூலம் மசினகுடி பகுதியில் காட்டு யானைகளுக்கு இருந்த தொல்லைகள் அகன்றது.
சட்டத்துக்குப் புறம்பாக இயக்கம்:
இந்நிலையில், மூடப்பட்ட பெரும்பாலான ரிசார்டுகள் பின் பக்க கதவுகளை திறந்து வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இயற்கை ஆர்வலர்கள் கூறும் போது, "மசினகுடி பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட் உரிமையாளர்களுக்கு பெரும்பாலான அதிகாரிகள் சேவகர்களாக உள்ளனர். இதனால், மூடப்பட்ட கட்டிடங்கள் வழக்கம் போல் இயங்கி வருகிறது. உயர் அதிகாரிகள் யாரேனும் ஆய்வுக்கு சென்றால், சம்பந்தப்பட்ட கட்டிடம் பூட்டப்படுகிறது. அதிகாரிகள் அங்கிருந்து சென்ற பின் வழக்கம் போல் இந்த கட்டிடங்கள் செயல்படத் தொடங்கி விடுகிறது. யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே யானைகள் வழித்தடம் மீட்க வாய்ப்புள்ளது" என்றனர்.
உள்ளூர் மக்கள் கூறும் போது, "ரிசார்ட் உரிமையாளர்களுக்கு நம்ப தகுந்தவர்கள் மூலம் மட்டுமே ரிசார்ட்டில் தங்க முடியும். ஆன்லைன் மூலம் உரிமையாளரின் கணக்கில் பணம் செலுத்திய பின்னரே அறை முன்பதிவு செய்யப்படும். முன் பதிவு செய்பவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் முன்பதிவு ரத்து செய்யப்படும்.
இந்த ரிசார்ட்டுகளில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ரிசார்ட்டுகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். மாலை நேரத்தில் அழைத்து வந்த தங்க வைத்து, அதிகாலை நேரங்களில் அறைகளை காலி செய்ய அறிவுறுத்துகின்றனர். ஒரு நாள் இரவு தங்க ரூ.5,000 வரை வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மூடப்பட்ட ரிசார்டுகளில் சுற்றுலா நடவடிக்கைகள் நடப்பதாக தெரிய வந்ததால், மூன்று ரிசார்ட்டுகளுக்கு வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்" என்றனர்.
மூடப்பட்ட ரிசார்ட்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்கிறார் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா.
அவர் கூறும் போது, "மசினகுடி, பொக்காபுரம் பகுதியில் மூடப்பட்ட ரிசார்ட்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர். மூடப்பட்ட ரிசார்டுகள் மீண்டும் இயங்குவதாக புகார் வந்ததால், நான் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளில் ஆய்வு செய்தோம்.
சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் அவற்றின் உரிமையாளர்கள் தங்க ஒரு சில அறைகள் உள்ளன. அந்த அறைகளில் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை தங்க வைத்திருக்கலாம். அது குறித்து ஆய்வு செய்ய வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.