

சிறையிலிருந்து ஆளுநர் மாளிகை, ரயில் நிலையம் தொடங்கி பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தைத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. கைதிகளுக்கு செல்போன் விற்றதாக 4 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை வந்தது. அத்துடன் தமிழக காவல் கட்டு்ப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சோதனை நடத்திய போலீஸார் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் நடத்திய விசாரணையில் அந்த அழைப்பு காலாப்பட்டு சிறையில் இருந்து வந்திருப்பது தெரிந்தது. இதனையடுத்து அங்கு சென்று போலீஸார் விசாரனை நடத்தினர்.
கார் திருட்டு வழக்கில் பெரியகடை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்த நித்தீஸ் சர்மா (வயது33) என்பவர் தான் செல்போன் மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது அம்பலமானது. தொடர் விசாரணையில் இங்குள்ள ரவுடிகள் தன்னை திட்டி, அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், அதை வெளிக்கொண்டு வரவே அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் சிறையில் சோதனை நடத்தி 12 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சூழலில் சிறையிலுள்ள விவகாரம் வெளியானதால் நித்தீஸ் சர்மாவை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிறைக் கைதிகளான கனகராஜ், மடுவுபேட் சுந்தர், பாம் ரவி, ரிஷி, சபீதீன் கூமா, ஜோதி, சுமன், சந்துரு ஆகிய 8 கைதிகள் மீது காலாப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர்
அதைத்தொடர்ந்து இன்று )ஜன.22) முதல்வர் நாராயணசாமி சிறைத்துறையினரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினார். அதில் சிறையில் வார்டன்களுக்கு தெரியாமல் எப்படி செல்போன் செல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். அத்துடன் சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்கவும், தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கண்டிப்பாக உத்தரவிட்டார்.
இதையடுத்து சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பணத்துக்காக சிறை காவலர்கள், செல்போன்களை கடத்தி கைதிகளுக்கு விற்று இருப்பது தெரிய வந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைதிகளுக்கு செல்போன் விற்றதாக சிறை காவலர்கள் சபரி, சங்கர், சீனு, ராமசந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து இன்று சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.