

1971, சேலம் மாவட்டத்தில் நடந்த பேரணி குறித்து நடிஜர் ரஜினிகாந்த் பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், ராமர், சீதை ஆகியோரின் நிர்வாணப் படங்களுக்கு, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டார். மேலும் சோ. ராமசாமியின் துக்ளக்கைத் தவிர மற்ற பத்திரிகை இதைப் பற்றி பிரசுரிக்கவில்லை என்றும் கூறினார்.
ரஜினிகாந்த் தவறான தகவலை பரப்புவதாக திக மற்றும் சில அரசியல் கட்சிகள் தற்போது குற்றம்சாட்டியுள்ளன. தெய்வங்களின் நிர்வாணப் படங்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் அவர்கள் மறுத்துள்ளனர்.
அந்த வருடம் நடந்த சம்பவங்கள் பற்றிய தெளிவு கிடைப்பதற்காக, 1971-ஆம் ஆண்டு அந்த பேரணியில் நடந்தவைப் பற்றியும், அதற்கு எழுந்த எதிர்வினைகள் பற்றியும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் பிரசுரமான செய்தியை மீண்டும் தருகிறோம்.
சர்ச்சைக்குரிய படங்கள்
'ஆபாச சித்தரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்' என்ற தலைப்பில் ஜனவரி 25, 1971 தி இந்துவில் பிரசுரமான செய்தியில், சேலம் நிருபர், அதற்கு முந்தைய நாள் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு பற்றிய செய்தியில் எழுதியுள்ளதாவது:
"இந்த ஊர்வலத்தில் முருகக் கடவுளின் பிறப்பு, முனிவர்களின் தவம், மோகினி அவதாரம் பற்றிய ஆபாசமான படங்கள் இருந்தன. ராமரின் 10 அடி உயரப் படம் ஒரு வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டது. அதை பல பேர் செருப்பால் அடித்துக் கொண்டிருந்தனர்"
மேலும் அந்த செய்தியில், "பெரியார் ஒரு ட்ராக்டரில் அமர்ந்தவாறு அந்தப் பேரணியை தொடர்ந்தார். பேரணியின் முடிவில் ராமரின் கட் அவுட்டிற்கு தீ வைக்கப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானத்தில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இன்னொருவரின் மனைவி மீது ஆசைப்படுவதை குற்றமாகக் கருதாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் டிவி சொக்கப்பா, தி இந்துவுக்கு எழுதிய கடிதத்தில், இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். திருமணமான பெண் தனது கணவர் அல்லாது வேறொருவருடன் நெருக்கமாக இருக்க விரும்புவது பற்றிதான் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். செய்திக்கும், தீர்மானத்துக்கும் வித்தியாசங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் சொல்லியிருந்த சேலம் நிருபர், தனது செய்தி சரியானதே என்றும், பெரியார், "மைனர் பெண்ணை கவர்வது தவறு. அது கடத்தல், அதுவும் குற்றமாகும். ஆனால் இன்னொருவரின் மனைவியான, வளரந்த, மேஜர் பெண்ணை ஒருவர் தீவிரமாக காதலிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்ணும் இந்தக் காதலுக்கு சம்மதம் தெரிவித்தால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அந்தப் பெண்ணின் கணவன் இந்தத் திருமணத்தை தடுக்கக் கூடாது" என்று பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதம் உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகளில் இருக்கும் மத ரீதியான பழக்கவழக்கங்களை விமர்சிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்" என இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் முதலில் வந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 31, 1971-ல் தி இந்து (ஆங்கிலம்)வில் பிரசுரமான செய்தியில், நடந்த ஊர்வலம், அதில் இடம்பெற்ற ஓவியங்கள் குறித்த முதல்வர் மு கருணாநிதியின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை நிருபர்களிடம், பெரியாருக்கு புரட்சிகரமாக சிந்திக்க உரிமை உண்டு, ஆனால் அவரது புரட்சியின் யோசனைகளை அமல்படுத்த எந்த அரசாங்கமும் தயாராக இருக்காது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும், "திக நடத்திய பேரணியில் ஆபாச படங்கள் இடம்பெற்றதும், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கியதும் குறித்து நாளிதழ் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டு வருத்தப்படுவதாகவும் முதல்வர் கூறினார். சிலரின் உணர்வுகள் புண்பட்டிருக்கும், அதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கருணாநிதி சொன்னார்" என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரிகளுக்கு எதிரான புகார்
தன்னையும், தான் இருக்கும் கட்சியையும் இந்த தினசரிகள் அவதூறாகப் பேசியதாக தி இந்து, தி இண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி ஆகிய தினசரிகளுக்கு எதிராக சொக்கப்பா புகார் அளித்தார். இன்னொருவரின் மனைவியைக் கவர்வதைக் குற்றமாகக் கருதக்கூடாது என்ற தீர்மானம் பற்றி தி இந்து பிரசுரித்த செய்திக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்த வழக்குக்கு எதிராக மூன்று தினசரிகளும் தொடர்ந்த முறையீட்டு மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 4, 1972 அன்று, அவதூறு குற்றச்சாட்டுக்காக இந்த தினசரிகளுக்கு எதிராக சென்னை நீதிபதி பிறப்பித்த நடவடிக்கை உத்தரவை ரத்து செய்தது.
- டி, சுரேஷ் குமார், ஸ்ரீனிவாசன் ரமணி (இந்து ஆங்கிலம்) | தமிழில் கார்த்திக் கிருஷ்ணா