

சிவகாசியில் நேற்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பகுதிக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிவகாசி அருகே நேற்று முன் தினம் மாலை இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்ற 8 வயது சிறுமி ஒருவர் மாயமானார். சிறுமியை நீண்ட நேரம் தேடிய பெற்றோர், உறவினர்கள் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலையில் முட்புதர்களுக்கு இடையே சிறுமி ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இது தொடர்பாக வட மாநில இளைஞர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுமியின் பெற்றோர் உறவினருக்கு ஆறுதல் கூறினார். தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் உதவி செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் இருந்தனர்.
என் மகளுக்கு நேர்ந்தது போல் யாருக்குமே நடக்கக் கூடாது என குழந்தையின் தாய் கதறி அழுதது அனைவரையும் நெகிழச் செய்தது.
அப்போது குழந்தையின் தாயிடம் பேசிய அமைச்சர், "இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. தமிழகத்தின் பிரச்சினை. தமிழகத்தில் இதுபோன்று சிறுமிக்குத் துயரம் நேர்வது இதுவே கடைசியாக இருக்கும். தமிழக காவல்துறையினரை நீங்கள் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இனி இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுப்பார்கள்" என்றார்.
தொடர்ந்து அவர் சிறுமி படுகொலை செய்யப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டார். அப்போது அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோஷமிட்டனர்.