கே.எஸ்.அழகிரி - ரஜினிகாந்த்: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி - ரஜினிகாந்த்: கோப்புப்படம்

வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்: ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

Published on

வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள் என, நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.22) வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாமல், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து கூறியிருப்பது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. இந்த கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

அரசியலுக்கு வருவதாகக் கூறி, இன்னும் உறுதியாக வராத நிலையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்த்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு விடியலைப் பெற்றுத் தந்து, சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் கருத்து கூறியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

1971 இல் நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து கூறுகிற நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் சோ, 1992 டிசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து, அடுத்து வெளிவந்த துக்ளக் வார இதழின் அட்டைப் படத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க, கருப்பு வர்ணத்தை பூசி தலையங்கத்தில் 'அயோத்தியில் நடந்த அயோக்கியத்தனம்' என்று கடுமையாக விமர்சனம் செய்ததை ஏன் நினைவு கூறவில்லை ?

அதுபோல், 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அராஜக, ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கு திமுக - தமாகா கூட்டணியை ஏற்படுத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் எடுத்த முயற்சிகள் குறித்தும், அதற்கு துக்ளக் ஆசிரியர் சோ துணை புரிந்ததையும் துக்ளக் ஆண்டு விழாவில் சுட்டிக்காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமே? நடிகர் ரஜினிகாந்த் 1971 சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு 1992, 1996 சம்பவங்களை நினைவு கூறாமல் மூடி மறைத்தது ஏன்? இதில் உள்ள அரசியல் வகுப்புவாத உள்நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கூறுவாரா?

துக்ளக் ஆண்டு விழாவில் கூறிய கருத்தை நியாயப்படுத்துகிற வகையில் "கற்பனையாக கூறவில்லை, நடந்ததைத் தான் சொன்னேன்" என்று கூறியதோடு, இந்த சம்பவம் "மறைக்கக் கூடிய சம்பவம் அல்ல, ஆனால் மறக்கக் கூடிய சம்பவம்" என்று விளக்கவுரை கூறியிருக்கிறார்.

1992, 1996 சம்பவங்களை மறைத்து விட்டு, மறக்கக் கூடாத சம்பவமாக 1971 சம்பவத்தை மட்டும் நினைவுடன் கூறியது ஏன் ? நடிகர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு இன்னும் இருக்கிற நன்மதிப்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள். "நடிகர் ரஜினிகாந்த், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள்" என்று அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in