

சேலத்தில் உண்ணாவிரதம் இருந்தபோது கைதான சசிபெரு மாளின் மகன் திடீரென மயக்கம் அடைந்தார். போலீஸாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை அருகே நேற்று அடுத்தடுத்து உண்ணாவிரதம் இருந்த சசிபெருமாளின் குடும்பத்தினர் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைதானவர்களை போலீஸார் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சேலம் மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் 40 பேர், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு, போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள், விடாப்பிடியாக கைது செய்தவர்களை விடுவிடுக்க வேண்டும், அஹிம்சை முறையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறி போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நேரத்தில் திருமண மண்டபத்தில் இருந்த சசிபெருமாளின் மகன் விவேக் திடீரென மயங்கி கீழே விழுந்தார். தகவல் அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்து, தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து உடனடியாக போலீஸார் மண்டபத்தில் இருந்து மயக்கமான விவேக் மற்றும் அவருடன் கைதானவர்களை வேனில் ஏற்றிக் கொண்டு வேறு இடத்துக்கு சென்றனர். விவேக் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து திருமண மண்டபம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் போலீஸ் வேனில் ஏற மறுத்ததால் போலீஸார் அவர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.