

அதிமுக எப்போதும் மத்திய அரசுடன் இணைந்து மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகிறது ஆனால் திமுகவோ மக்களை மதப் பிரச்சினைகளில் தூண்டி விட்டுக் கொண்டும் அதிமுக அரசை குற்றஞ்சாட்டிக் கொண்டும் உள்ளது என சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசினார்.
மதுரை அவனியாபுரத்தில் 103-வது எம்ஜிஆர் பிறந்த தின விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், "1972-ல் திமுகவில் இருந்த எம்ஜிஆர், கணக்கு கேட்டதால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு அவர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
அன்று முதல் இன்றுவரை புரட்சித்தலைவர் வழியில் ஜெயலலிதா அவரது மறைவுக்குப் பின் முதல்வர் எடப்பாடியார் துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் திறமையாக ஆட்சி புரிந்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் கனவுகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். இதனால் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் எடப்பாடியும் மக்கள் இதுவரை மறக்கவில்லை. அதிமுக அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கச் செய்தது. மதுரை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
கீழவாசல் பாலம், ரிசர்வ்லைன் பறக்கும் பாலம், எய்ம்ஸ் மருத்துவமனை. எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் துணைக்கோள் நகரம் ஆகியவற்றை நிறைவேற்றி வருகிறது. மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து அதிமுக செயல்படுத்துகிறது. ஆனால் திமுக எப்போதுமே குறை கூறி போராட்டம்தான் நடத்துகிறது.
திமுக, காங்கிரஸ் மக்களை மதப் பிரச்சினையிலிருந்து தூண்டி விட்டுக் கொண்டு அதிமுக அரசை குற்றம் சாட்டிக் கொண்டு உள்ளன.
திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்து போன கண்ணாடி. ஆனால் ஸ்டாலின் உடைந்து போன கண்ணாடியை ஒட்ட வைக்க முடியும் எனக் கூறுகிறார். கடந்த 15 ஆண்டு காலமாக திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்தியில் இருந்தது. ஆனால் 15 ஆண்டுகாலமாக தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்று பாஜக பாராட்டியுள்ளது. தற்போது தூத்துக்குடியில் ரூ.40 கோடி செலவில் சென்னை தொழிற்சாலைகள் கொண்டுவந்து உள்ளன. சட்டமன்றத்தில் திமுக எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனால் மத்திய, மாநில அரசுகளை குறை கூறிக் கொண்டுதான் இருக்கிறார்.
இவ்வாறு ராஜன் செல்லப்பா பேசினார்.