Published : 22 Jan 2020 12:58 PM
Last Updated : 22 Jan 2020 12:58 PM

ரஜினிக்கு திமுக வேண்டுமானால் அஞ்சும் அதிமுக அஞ்சாது: அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி தேவையில்லாததை பேசுவதை குறைத்துக் கொள்ளவேண்டும், வாயை மூடி மவுனமாக இருக்கவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து துக்ளக் பத்திரிகையில் வந்ததாக சில கருத்துக்களை பேச அது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியது பெரியாரை அவமதிக்கும் செயல் சமூகத்தில் வதந்தியை கிளப்பி அமைதியை குலைக்கிறார் என திராவிட இயக்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இதுகுறித்து பேசிய ரஜினி தான் எதையும் ஆதாரமில்லாமல் பேசியதாக கூறி 2017-ல் அவுட்லுக்கில் வந்த பத்திரிகை செய்தி அடிப்படையில் பேசியதாக கூறியது மேலும் விவாதத்தை கிளப்பியது. இதற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

ரஜினிக்கு ஆதரவாக எச்.ராஜா, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு கடும் எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதற்கு தக்க நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாக அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அது அவருடைய கருத்தாக இருக்கலாம். கட்சியின் கருத்து இல்லை’’ எனத் தெரிவித்தார்.

ரஜினியின் பேட்டி அதையொட்டி எழும் சர்ச்சைகள் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, “நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவருக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம்.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. 1971ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என துக்ளக் ஆசிரியர் ‘சோ’-வே கூறியுள்ளார்.. தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும். ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் அதிமுக பயப்படாது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x