

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழ் வழியில் நடத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மாநாடு தஞ்சையில் தொடங்கியது.
மன்னர் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும், பாரம்பரியத்துக்கும் எடுத்துக்காட்டாக வானுயர்ந்து நிற்கிறது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவினை தமிழ் மரபுவழி படி நடத்த வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்களும், ஆன்மிகவாதிகளும், தமிழ் அறிஞர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் மரபுவழி படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மாநாடு தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜன.22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், முன்னாள் அறநிலை துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று மாலை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. முன்னதாக தமிழ் மரபுவழி குடமுழுக்க நடத்த வலியுறுத்தி தமிழ் வேள்வி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் மற்றும் சித்தர்கள் கலந்து கொண்டு தமிழ் முறைப்படி இந்த வேள்வியை நடத்தினர்.