

என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்தான் காரணம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில், பெரியார் தொடர்பான சில கருத்துகளை ரஜினி முன்வைத்தார். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது, "துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்ன மாதிரியான நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவுட்லுக் பத்திரிகையில் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்கள். அந்த ஊர்வலத்தில் ராமர் - சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இதிலேயே வந்திருக்கிறது. இல்லாத விஷயத்தை நான் ஒன்றும் சொல்லவில்லை. கற்பனையாகவும் சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதையும், இதில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றிரவு (ஜன.21) சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "கீழ்த்தட்டில் இருக்கும் ஏழை, எளிய மக்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக பெரியார் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தார். என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த உன்னத நிலைக்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்கள் உண்மைக்கு மாறாகச் சென்று, பெரியார் சொன்ன கருத்துகள்தான் இன்றைக்கு கோபுரத்தின் உச்சியில் நீடித்து நிலை கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.