Last Updated : 22 Jan, 2020 10:47 AM

 

Published : 22 Jan 2020 10:47 AM
Last Updated : 22 Jan 2020 10:47 AM

திருச்சி அரசு மருத்துவமனையில் கால்கடுக்க காத்திருக்கும் இதய நோயாளிகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் இதய நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காகவும், மருந்து வாங்கிச் செல்லவும் நேற்று 2-வது தளத்துக்குச் செல்லும் மாடிப்படிகள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள்.

திருச்சி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், மருந்து- மாத்திரைகள் பெறவும் இதய நோயாளிகள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுவதற்காக திருச்சி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். இவர்கள் தவிர, நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த மருத்துவமனையில் இதய நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டுமே இதய சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.

அவசர சிகிச்சைக்காக வருபவர்களைத் தவிர்த்து, இதய நோய்ப் பாதிப்புக்காக சிகிச்சை பெறும் வெளி நோயாளிகள் அனைவருக்கும் இந்த 2 நாட்கள் மட்டுமே மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து விநியோகம் நடைபெறுகிறது. இதனால், அந்த 2 நாட்களில் இதய சிகிச்சைக்காக 700 முதல் 800 பேர் வரை வெளி நோயாளிகளாக இங்கு வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் முதியவர்கள்.

இவர்களுக்கு இங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. வரிசையில் காத்திருப்பவர்கள் அமர இருக்கை வசதிகள் இல்லாததால், மருத்துவ பரிசோதனைக்காகவும், மருந்து வாங்கவும் நீண்டநேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், இதய சிகிச்சைக்கு வருபவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதுதொடர்பாக இதய நோயாளிகள் கூறும்போது, “இதய நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வாரந்தோறும் 2 நாட்கள் மட்டுமே செயல்படுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, முதியவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தும் போதிய இருக்கை வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை. இதனால், பல்வேறு வழிகளிலும் அவதிப்பட்டு வருகிறோம். இது எங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, இதய நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படும் நாட்களையும், பரிசோதனை செய்யும் இதய சிகிச்சை மருத்துவர்கள் எண்ணிக்கையையும், மருந்து விநியோகிக்கும் மருந்தாளுநர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “இதய நோய் பாதிப்பு வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் கூடுதல் மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்தவும், மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு நேரிடும் இடர்பாடுகளைக் களையவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x