Published : 22 Jan 2020 10:39 AM
Last Updated : 22 Jan 2020 10:39 AM

கோவை-சென்னை இடையே புதிய ஏசி சிறப்பு ரயில்: 24-ம் தேதி முதல் இயக்கம்; நெரிசலை குறைக்க நடவடிக்கை

கோவை

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கோவை-சென்னை இடையே வரும் 24-ம் தேதி முதல் புதிய ஏசி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வேலை நிமித்தமாக வந்து செல்வோர், வெளியூர்களில் இருந்து கோவையில் தங்கி பயிலும் மாணவர்கள், வணிகர்கள், மருத்துவமனைகளுக்கு வந்து செல்வோர் என, பலர் ரயில்களில் வருகின்றனர். இதனால், கோவை - சென்னை வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த வழித்தடத்தில், பண்டிகைக் காலங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களி லேயே இருக்கைகள் நிரம்பிவிடுகின்றன. எனவே, கோவை - சென்னை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென, பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கோவை - சென்னை சென்ட்ரல் இடையே புதிய ஏசி சிறப்பு ரயிலை சோதனை அடிப்படையில் இயக்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘கோவை - சென்னை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றன. இந்த ரயில்கள் மூலமாக மட்டும் தினமும் சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். இருப்பினும், அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் இருக்கிறது.

கூட்ட நெரிசலை குறைக்கவும், கூடுதலான பயணிகள் பயணிக்க ஏதுவாகவும் வரும் 24-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை முழு ஏசி ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை - சென்னை ஏசி சிறப்பு ரயில் (எண்:06028) காலை 5 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, நண்பகல் 12.45 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னை - கோவை இடையேயான ஏசி சிறப்பு ரயில் மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு கோவை வந்தடையும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.

மொத்தம் 7 எல்எச்பி பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், 2 எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டிகள், 5 சாதாரண சேர் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் 58 இருக்கைகளும், சாதாரண சேர் கார் பெட்டியில் 72 இருக்கைகளும் இருக்கும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 68 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரயிலுக்கு கிடைக்கும் வரவேற்பு, வருவாய் அடிப்படையில் நிரந்தரமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றனர்.

இன்று முன்பதிவு தொடக்கம்

ஏசி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

கோவையில் இருந்து சென்னைக்கு எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பெட்டியில் பயணிக்க ரூ.2,305 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர் கார் பெட்டியில் பயணிக்க ரூ.815 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருப்பூரில் இருந்து எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் சென்னை சென்றால் ரூ.2,155, சாதாரண சேர் காரில் பயணித்தால் ரூ.755 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x