

பெரம்பலூர் அருகே அரசு டாஸ் மாக் மதுபானக் கடை ஒன்றில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்பட்டது குறித்து புகைப் படத்துடன் சமூக வலைதளங்க ளில் பரவும் தகவல், மதுப்பிரியர் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உப்போடை பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில், பெரம்பலூர் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஜன.19-ம் தேதி பீர் வாங்கி அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது நாக்கில் அரிப்பும், தொண்டையில் கடுமையான எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தான் வாங்கி அருந்திய பீர் பாட்டிலின் மீது ஒட்டப்பட்டிருந்த லேபிளை அவர் பார்த்தபோது அதில், 12.4.2019 அன்று தயாரிக்கப்பட்டதாகவும், இதை 6 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பாட்டிலை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
தற்போது வாட்ஸ் அப் உள் ளிட்ட சமூக வலைதளங்களில், பெரம்பலூர் மாவட்டத்தில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்படுவது குறித்த செய்தி வைரலாகி மதுப்பிரியர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.
இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவதாஸ், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, “மாவட்டத்துக்கு மதுபான வகைகள் வந்தவுடன் உடனுக்குடன் விற்பனையாகி விடுகின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க டாஸ்மாக் கிடங்கிலிருந்து காலாவதியான மதுபானம் சில்லறை விற்பனை கடைகளுக்குச் செல்ல வாய்ப்பே இல்லை. விற்பனையாளர் ஏதேனும் செய்திருக்கலாம். இதுகுறித்து தொடர்புடைய கடையில் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும்” என்றார்.