

தி.நகரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் டாஸ்மாக் கடை (கடை எண் - 521) செயல்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி மாலை 4.30 மணியளவில் இந்தக் கடைக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மது வாங்குவது போல் நடித்து விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, கடைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். இது தொடர்பாக கடையின் விற்பனையாளர் பழனிவேல் (39) கொடுத்த புகாரின்படி மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (28), கண்ணன் (24), தி.நகர் கிரியப்பா தெருவைச் சேர்ந்த குணநிதி (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தேனாம்பேட்டை எஸ்எம் நகரை சேர்ந்த கருக்கா என்கிற வினோத் (32) என்பவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.