விருப்ப ஓய்வில் செல்கிறார் தமிழக ஐ.டி. துறை செயலர்: தலைமைச் செயலருக்கு மின்னஞ்சல்

விருப்ப ஓய்வில் செல்கிறார் தமிழக ஐ.டி. துறை செயலர்: தலைமைச் செயலருக்கு மின்னஞ்சல்
Updated on
1 min read

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக இருக்கும் டாக்டர் சந்தோஷ்பாபுவின் கடிதத்தை ஏற்று அவரை விருப்ப ஓய்வில் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலராக பணியாற்றி வருபவர் டாக்டர் சந்தோஷ் பாபு(51). கடந்த 1995-ம் ஆண்டு நேரடி ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு முக்கியமான பதவிகளில் பணியாற்றியுள்ளார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் தவிர ‘டான்பினெட்’ என்ற தமிழக அரசின் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் உள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில், தலைமைச் செயலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில், ‘நான் தனிப்பட்ட காரணங்களால் விருப்ப ஓய்வு பெறுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, இக்கடிதம் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவரை விருப்ப ஓய்வில் செல்ல அரசு அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு மேல் அவர் விருப்ப ஓய்வில் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசில் உள்ள இதர 35 துறைகளுக்கும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் தேவையான மென்பொருள் உருவாக்கம், கணினிமயமாக்கம் போன்ற பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செய்து வரும் நிலையில், அத்துறையின் செயலராக உள்ள சந்தோஷ்பாபுவின் திடீர் முடிவு, தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்பாபு, கடந்த 1968-ம் ஆண்டு பிறந்தவர். மருத்துவ பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ள சந்தோஷ்பாபுவுக்கு, இன்னும் 9 ஆண்டுகள் பணிக்காலம் மீதமிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in