

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் தலைமைச் செயலர்கே.சண்முகம் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம்தேதி வெகு விமரிசையாக நடத்ததமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்த குடமுழுக்கு விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே,இந்த மிகப்பெரிய நிகழ்வை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்கும் தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தக் கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு,உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையிலான இக்குழுவில் நிதித்துறை செயலர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர், சுற்றுலாத் துறை செயலர், உள்துறை செயலர், உணவுத் துறை செயலர், வருவாய்த் துறை செயலர், போக்குவரத்துத் துறை செயலர், பொதுப்பணித் துறை செயலர், எரிசக்தித் துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர், அறநிலையத் துறை ஆணையர், சுகாதாரத் துறை செயலர், செய்தித் துறை செயலர், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தமிழகடிஜிபி, தீயணைப்புத் துறை இயக்குநர், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர், சென்னையில் உள்ள இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் என 20 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழுவின் ஒருங்கிணைப்பாளராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை செயலர் அசோக் டோங்ரே வெளியிட்டுள்ளார்.