Published : 22 Jan 2020 07:13 AM
Last Updated : 22 Jan 2020 07:13 AM

புத்தக வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

புத்தக வாசிப்பு என்பதை அடுத்ததலைமுறைக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 43-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை நடந்த நிறைவு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பதிப்பு துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்த 20 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். மேலும், பபாசி உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள மாணவர்களில் கடந்த ஆண்டு நடந்த 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கும், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என மொத்தம் 8 பேருக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

உலகில் புகழ்பெற்ற அறிஞர்கள், தலைவர்கள் அனைவரும் நூல் வாசிப்பின் மூலமே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொண்டனர். நம் வாழ்வில் புத்தக வாசிப்பு மிகவும் முக்கியமானது. அதனால் புத்தக வாசிப்பு என்பதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும். மனித வாழ்க்கை வளம்பெற அனைவரும் கிடைக்கும் நேரங்களில் நூல்களை படிக்க வேண்டும். அதற்கு எழுத்தாளர்கள் தேசப்பற்று, சமூக நலன் கருத்துகளை உள்ளடக்கிய நூல்களைதொடர்ந்து அளித்து சமூகத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும்.

இளம் எழுத்தாளர்கள் வாழ்வில் ஏற்படும் புறக்கணிப்புகள், அவமானங்கள், தடைகளைக் கண்டு சோர்ந்துவிடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகக் காட்சியை தொடர்ந்து நடத்துவதன் மூலம், சமூகத்துக்கு சிறந்த பணியை பபாசி ஆற்றி வருகிறது. அவர்களுக்கு, உதவும்விதமாக அடுத்த ஆண்டுமுதல் புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும். அத்துடன் தனிப்பட்ட முறையில் எனது பங்களிப்பாக ரூ. 5 லட்சம் வழங்குகிறேன். மேலும், கன்னிமாரா நூலகத்தில் அமைந்துள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கான வாடகையை ரத்து செய்யவும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், பபாசி தலைவர் ஆர்.எஸ். சண்முகம், செயலாளர் எஸ்.கே.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x