வருமானத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு; கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வருமானத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு; கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வருமானத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம், நிதி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பதிவுமற்றும் விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவ கங்கை எம்பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி நிதி ஆகியோர் முட்டுக்காட்டில் தங்களுக்குச் சொந்தமான சொத்து களை கடந்த 2015-ம் ஆண்டு தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

அதில் கிடைத்த ரூ.7.73 கோடியை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக வருமானவரித் துறை இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தது.

எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கு

இந்த வழக்கு விசாரணை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக கார்த்தி சிதம்பரம், நிதி ஆகியோர் நேற்று நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குவிசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்பாக நேற்று நடந்தது.

அப்போது வருமானவரித் துறை சார்பில், ‘‘ஏற்கெனவே எம்பி,எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில்தான் சிறப்பு நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் மற்றும் நிதி ஆகிய இருவரையும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி எம்.சுந்தர், ‘‘இந்த வழக்கு விசாரணையை எதிர்த்து மனுதாரர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிய வேண்டியுள்ளது. எனவே மனுதாரர்கள் இருவருக்கும் எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணை மற்றும் குற்றச்சாட்டுப் பதிவை வரும் 27-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என இடைக்காலத் தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in