Published : 22 Jan 2020 07:01 AM
Last Updated : 22 Jan 2020 07:01 AM

பிப்.5-ல் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு புதிய கொடி மரம்

குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்வதற்காக கொடி மரத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு பிப்.5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில் புதிய கொடி மரத்தை தயார்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் காலத்தில் நிறுவப்பட்ட கொடி மரம் காலப்போக்கில் சேதமடைந்தது. பின்னர், மன்னர் இரண்டாம் சரபோஜியால் 1801-ம் ஆண்டில் புதிய கருங்கல் பீடம் கட்டப்பட்டு, 1814-ம் ஆண்டு பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாகப் புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. இக் கொடி மரமும் பழுதடைந்த நிலையில் 2003-ம் ஆண்டு புதிய கொடி மரம் நிறுவப்பட்டு, அதற்கு மட்டும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் பிப்.5-ம்தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையொட்டி கொடி மரத்தில் இருந்த பித்தளைக் கவசத்தை புனரமைப்பு செய்வதற்காக கடந்த ஜன.2-ம் தேதி கழற்றப்பட்டு பாலீஷ் போடும் பணி நடைபெற்று வருகிறது. கவசத்தை தனியே பிரித்தபோது கொடிமரமும் சேதமடைந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து புதிதாக கொடி மரம் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஜன.12-ம் தேதி கொடி மரம் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய கொடி மரம் அமைப்பதற்காக சென்னையிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் 40 அடி உயர பர்மா தேக்கு வரவழைக்கப்பட்டது. கொடி மரத்தை வடிவமைக்கும் பணியில் மதுரையைச் சேர்ந்த ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஸ்தபதி செல்வராஜ் கூறியதாவது:

புதிய கொடி மரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் தலா நான்கரை அடி உயரத்திலும், ருத்ர பாகம் இருபத்து எட்டரை அடி உயரத்திலும் அமைய உள்ளது. ஏற்கெனவே இருந்த கொடிமரத்தில் பொருத்தப்பட்டிருந்த கவசம் இயற்கையான முறையில் சுத்தம் செய்யப்பட்டு, பாலீஷ் போடும் பணி முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் பீடத்தில் கொடி மரத்தை பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x