Last Updated : 21 Jan, 2020 09:40 PM

 

Published : 21 Jan 2020 09:40 PM
Last Updated : 21 Jan 2020 09:40 PM

தாம்பரம் - நாகர்கோயில் ரயிலில் ‘பெர்த்’ அறுந்து விழுந்து பயணி காயம்: மதுரையில் முதலுதவி கிடைக்கவில்லை என அதிருப்தி

மதுரை

தாம்பரம் - நாகர்கோயில் ரயலில் ‘பெர்த்’ அறுந்து விழுந்து காயமடைந்த பயணிக்கு மதுரை போன்ற பெரிய ரயில் நிலையத்தில் கூட முதலுதவிக்கு ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை என்பதால் சக பயணிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

சென்னை தாம்பரம் - நாகர்கோயில் இடையேயான சிறப்பு விரைவு ரயில் நேற்று இரவு புறப்பட்டது. அந்த ரயிலிலுள்ள எஸ்-10 (S10) பெட்டியில் தர்மராஜ்என்பவர் பயணித்தார்.

ஸ்லீப்பர் கோச்சான அந்தப் பெட்டியில் அவர் தனக்கான கீழ் படுக்கையில் (பெர்த்) தூங்கிக் கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே திடீரென அவருக்கு மேல் பகுதியில் இருந்த நடுவில் இருந்த படுக்கை கழன்று விழுந்தது. இதில் அவர் அலறித் துடித்தார்.

சத்தம் கேட்டு சகபயணிகள் எழுந்து, தர்மராஜை மீட்டுள்ளனர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. முதலுதவி கொடுக்க ரயிலில் போதிய வசதியின்றி மதுரை ரயில்நிலையத்தில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்க முயற்சிக்கப்பட்டது.

ஆனால் மதுரை ரயில் நிலையத்திலும் முதலுதவி சிகிச்சைக்கான எந்த வித ஆயத்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற் பட்டது. இதன் காரணமாக சுமார் 30 நிமிட தாமதத்திற்குபின், தாம்பரம் - நாகர்கோயில் ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் கேட்ட போது, ‘‘நாகர்கோயில் ரயிலில் பெர்த் அறுந்து விழுந்து பயணி காயமடைந்த தகவல் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை,’’ என்றனர்.

ரயில்வே நிர்வாகத்தின் இந்த மெத்தனத்தால் காயமடைந்த பயணி கடும் வேதனையும், சக பயணிகள் அதிருப்தியும் அடைந்தனர்.

வெகு தூரம் செல்லும் விரைவு ரயில்களில் முதலுதவிப் பாக்ஸ் வைக்கவேண்டும் என்றும் பயணிகளுக்கு ஆபத்து நேரிடும்போது, முதலுதவி சிகிச்சை பொருட்கள் இருக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தம்பரம் அருகே ரயிலில் பயணித்த ஒரு பயணியின் கையில் ரயில் ஜன்னல் விழுந்ததில் அவரின் விரல் துண்டானது.

அவருக்கு முதலுதவி அளிக்க முடியாத நிலையில், மயிலாடுதுறையில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x