மாணவர் சேர்க்கை மிகமிக குறைவு: கலை, அறிவியல் கல்லூரியாக மாற விரும்பும் பொறியியல் கல்லூரிகள் - தொழில்நுட்ப கவுன்சிலிடம் விரைவில் விண்ணப்பம்

மாணவர் சேர்க்கை மிகமிக குறைவு: கலை, அறிவியல் கல்லூரியாக மாற விரும்பும் பொறியியல் கல்லூரிகள் - தொழில்நுட்ப கவுன்சிலிடம் விரைவில் விண்ணப்பம்
Updated on
1 min read

தமிழகத்தில் சுமார் 100 பொறியியல் கல்லூரிகளில் எல்லா பாடப் பிரிவுகளிலும் சேர்த்தே 100-க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. இதில் 20 கல்லூரிகள் கலை, அறிவியல் கல்லூரியாக மாறும் முடிவுக்கு வந்துள்ளன. இதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலில் விரைவில் விண்ணப்பிக்க உள்ளன.

தமிழகத்தில் 536 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிஇ, பிடெக் இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் பொது கலந்தாய்வை நடத்தி முடித்தது. இதில், பல கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேர்த்தே 100-க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. சுமார் 100 கல்லூரிகளில் இந்த நிலை காணப்படுகிறது.

இதுபோல, குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ள கல்லூரிகளில் 20 கல்லூரிகள் கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதுதொடர்பாக, தேசிய அளவில் கலை, அறிவியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) இக்கல்லூரி நிர்வாகிகள் அணுகியுள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அமைப்புதான். எனவே, முதலில் ஏஐசிடிஇ-யை அணுகுமாறு யுஜிசி துணைத் தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் ஏஐசிடிஇ-க்கு விண்ணப்பிக்க இக்கல்லூரி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது ஏஐசிடிஇ என்றாலும், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இக்கல்லூரிகள் முதலில் தடையில்லாச் சான்று (என்ஓசி) வாங்கியிருக்க வேண்டும். அந்த வகையில், கலை அறிவியல் கல்லூரிகளாக மாற விரும்பும் பொறியியல் கல்லூரிகள் மாநில அரசிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோல எந்த கல்லூரியிடம் இருந்தும் இதுவரை தகவல் வரவில்லை என்று மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அத்தகைய கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களே கல்விச் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு வேறு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிடுவார்களா அல்லது கல்லூரி நிர்வாகத்தினரே வேறு கல்லூரியில் சேர உதவி செய்வார்களா என்பது தெரியவில்லை.

தற்போது பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அதனால், வேறு கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு எவ்வித சிரமமும் இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in