Published : 21 Jan 2020 07:17 PM
Last Updated : 21 Jan 2020 07:17 PM

ஆமை வேகத்தில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம்: முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை

மதுரையின் 25 ஆண்டு குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ரூ.1020 கோடியில் அறிவிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம், முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.

மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆனால், குடிநீர், சாலை, சுகாதார கட்டமைப்பு வசதிகள், கடந்த 25 ஆண்டிற்கு முன்புள்ள அடிப்படையிலேயே உள்ளன. இதில், கோடை காலம் தொடங்கிவிட்டாலே மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள், குடிக்கவும், அன்றாட வீட்டு உபயோக பயன்பாட்டிற்கும் விலைக்கு தண்ணீரை வாங்கும் அவலம் தொடர்கிறது.

தற்போதே இந்நிலை நீடிப்பதால் ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டம் செயல்படத் தொடங்கினால் மதுரையின் வளர்ச்சி இன்னும் பல மடங்கு உயர்ந்துவிடும். மக்கள் நெருக்கமும் அதிகரிக்கும். அப்போது குடிநீர் தட்டுப்பாடும், அதனால், ஏற்படும் சுகாதாரசீர்கேடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதனால், முதல்வர் கே.பழனிசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், மதுரையின் அடுத்த 50 ஆண்டு குடிநீர் தேவையை அடிப்படையாகக் கொண்டு ரூ.1,020 கோடியில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வந்து 100 வார்டுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பகுதி-1, பகுதி-2, பகுதி-3 அடிப்படையில் அடுத்த 2 ½ ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது திட்டம் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பகுதி-1ல் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை பம்பிங் செய்து, பன்னைப்பட்டி என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

பகுதி-2ல் பன்னைப்பட்டியில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து எடுத்து வந்த தண்ணீரை மக்கள் குடிப்பதற்கு தகுந்தார்போல் மாற்றுவதற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.

பகுதி-3-ல் பன்னைப்பட்டியிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இந்த குடிநீரை, 80 டிவிஷன்களை அமைத்து புதிதாக 50க்கும் மேற்பட்ட மெகா மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைத்து, 6,500 கி.மீ., தூரம் 100 வார்டுகளில் புதிதாக குடிநீர்குழாய்கள் பதித்து பொதுமக்களுக்கு முல்லைப்பெரியாறு குடிநீர் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தட்டுப்பாடில்லாமல் வழங்கப்படுகிறது.

தற்போது பகுதி-2 திட்டம் டெண்டர்விடப்பட்டு, சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை சீரமைக்கும் பணி நடக்கிறது. பகுதி-1, பகுதி-2 டெண்டர் விடப்பட்டு, இந்த திட்டத்திற்கு கடனுதவி வழங்கும் ஏசியன் டெவலெப்மெண்ட் வங்கி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

அவர்கள் ஒப்புதல் வழங்கியதும், மூன்று பணிகளுக்கான பணிகள் ஒரே நேரத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கிவிடும். அதற்கான பூமி பூஜையும் நடக்கஉள்ளது. அதற்காக தற்போது பணிகள் தொடங்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது.

பகுதி-2ல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிலத்தை தயார் பணி தொடங்கி நடக்கிறது. 1984ல் ஒரு மாதத்திற்கு 1,500 மில்லியன் கன அடி குடிநீர் எடுப்பதற்கு அனுமதி போடப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை 850 மில்லியன் கன அடி தண்ணீரை பெரியாறு அணையிலிருந்து எடுத்து வைகை அணையில் தேங்கி மதுரை மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது.

அதனால், 1,500 மில்லியன் கன அடி தண்ணீரை முழுமையாக பெறவே பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x