Published : 21 Jan 2020 05:25 PM
Last Updated : 21 Jan 2020 05:25 PM

யாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்

யாரோ தருகிற தரவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு ரஜினி கருத்து சொல்லக் கூடாது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில், ரஜினி பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினி இன்று (ஜன. 21) செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது, "துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்ன மாதிரியான நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவுட்லுக் பத்திரிகையில் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்கள். அந்த ஊர்வலத்தில் ராமர் - சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இதிலேயே வந்திருக்கிறது. இல்லாத விஷயத்தை நான் ஒன்றும் சொல்லவில்லை. கற்பனையாகவும் சொல்லவில்லை. மற்றவர்கள் சொன்னதையும், இதில் வந்ததையும்தான் சொல்லியிருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.

ரஜினியின் பேச்சு தொடர்பாக திருமாவளவன் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"பெரியார் தொடர்பாக ரஜினி கூறிய கருத்து வரலாற்றுப் பிழை என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறோம். அதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தோம். அரசியலில் சில நேரங்களில் தவறான தகவல்களைப் பேச வேண்டிய நிலை வரலாம். அது தவறல்ல. அப்படி, ஆதாரமில்லாமல் ஒருவர் மீது தவறான கருத்துகளைச் சொல்லும்போது, தவறு என்று உணரும் நேரத்தில் அதற்காக வருந்துவது நாகரிகமான அரசியல்.

ரஜினி வருத்தம் தெரிவிப்பதும், தெரிவிக்காததும் அவரின் தனிப்பட்ட உரிமை. ஆகவே, அவரைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால், அவர் நாகரிகமான அரசியல் செய்ய விரும்பினால், அதற்காக வருத்தம் தெரிவிக்க முன்வருவார். அவர் யாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு, அன்றைக்கு வெளியான சில ஊடகப் பதிவுகளை வைத்துக்கொண்டு, 'பெரியாரே செருப்பால் அடித்தார்' என திரும்பத் திரும்பச் சொல்வது ஏற்புடையதல்ல.

பெரியார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும் கூட, நாகரிகமான அணுகுமுறைகளைக் கையாண்டவர். அவர், ராஜாஜியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அவருடன் மிகச்சிறந்த உயரிய நட்பைக் கொண்டிருந்தார். அதேபோல, மூடநம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார். ஆனால், குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசிய போது, அதைப் பணிந்து ஏற்றுக்கொண்டார். இதுதான் பெரியார்.

ராமர் அவதாரங்களையும், கிருஷ்ணர் அவதாரங்களையும் மூர்க்கமாக விமர்சித்தவர் என்பது வரலாற்று உண்மை. ஆனால், அதற்காக அவரே செருப்பு கொண்டு ராமர், சீதை படங்களை அடித்து அவமதித்தார் என்று சொல்வது முற்றிலும் தவறானது. பிழையான வரலாறு.

நண்பர் ரஜினிகாந்த் ஒருமுறைக்கு இருமுறை மீண்டும் கடந்த கால வரலாற்றுக் குறிப்புகளை பார்ப்பது நல்லது. யாரோ தருகிற தரவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் கருத்து சொல்வதோ அல்லது சவால் விடுவதோ அவருக்கு ஆரோக்கியமான அரசியலாக அமையாது.

பெரியார் கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் நாகரிகமான அணுகுமுறைகளைக் கொண்ட தலைவர் என்பதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x