மக்கள் மன்றத்தில் அதிமுகவின்  முகமூடியைக்  கிழித்தெறியச்  சபதமேற்போம்: திமுக தீர்மானம்

மக்கள் மன்றத்தில் அதிமுகவின்  முகமூடியைக்  கிழித்தெறியச்  சபதமேற்போம்: திமுக தீர்மானம்
Updated on
2 min read

நிதி, கடன் சுமை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, நீட், 5,8 வது பொதுத்தேர்வு, சிறுகுறு தொழில்களுக்கு பாதிப்பு என அதிமுக அரசின் முகத்தீரையை கிழித்தெறிவோம் என திமுக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஆறாவது தீர்மானமாக அதிமுக அரசின் அடுக்கான தோல்விகள் என குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். இதுகுறித்து தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

“அ.தி.மு.க. அரசின் அடிமைத்தனத்தால் தமிழக உரிமைகள் எல்லாம் பறிபோவதுடன் - நிதி, நிர்வாகம் அனைத்திலும் தேக்க நிலைமை உருவாகி - ஒட்டுமொத்த மாநிலமே வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் ஸ்தம்பித்துத் தள்ளாடுகிறது.

இன்றைக்கு அதிமுகவின் அராஜக ஆட்சி :

* 2600 ஆண்டுகள் பழமைமிக்க தமிழர்களின் நகர நாகரிகத்தின் ஆதாரங்கள் கீழடியில் கிடைத்தும், அங்கு ஆறாவது கட்ட அகழாய்வை தமிழக அரசு தாமதிக்கிறது.

* “நீட்” தேர்வை ரத்து செய்வதற்கு உறுதியான மனப்பூர்வமான முயற்சிகளை எடுக்காமல், காலம் தாழ்த்தி வழக்குப் போட்டு, நாடகம் ஆடி ஏமாற்றி, மாணவ மாணவியரின் மருத்துவக் கனவுகளை சிதைக்கிறது.

* ஹைட்ரோ கார்பனுக்கு “சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” என்ற மத்திய அரசின் உத்தரவை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், மாநில அரசே செய்ய வேண்டியதைச் செய்யாமல், மத்திய அரசிடம் மண்டியிட்டு, கடிதத்துடன் கையேந்தி நிற்கிறது.

* ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு முயற்சிக்காமல், 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று, அதிலும் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறது.

* 48,738 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் துவங்கப் போகிறோம் என புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் “நாடகம்” ஒன்றை அரங்கேற்றி - லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கவும், வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு ஓடவும் செய்துள்ளது.

* 22,560 சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் துவங்கப் போகிறோம் என்று வெற்று அறிவிப்பு செய்துவிட்டு- ஆயிரக்கணக்கான சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை இழுத்து மூடிவிட்டது.

* தொடர்ந்து ஏறிவரும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏன் என்று தட்டி கேட்க முடியாமல், கைபிசைந்து நிற்கிறது.

* தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் க்ரூப்-4 தேர்வுகள் உள்பட பல தேர்வுகளில் வரலாறு காணாத குளறுபடிகளை உருவாக்கி, தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையினை பாழ்படுத்தி விட்டது.

* 1500 கோடி ரூபாய்க்கு மேலான நீண்ட கால நிலுவைத் தொகையால், கரும்பு விவசாயிகளை தீராக் கவலையில் தள்ளியுள்ளது.

* “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு முழுமையாக நிவாரணம் அளிக்காமல், தென்னை விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது.

* அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் எதிர்ப்பு வழக்கு விசாரணைகளில், கூச்சமே இன்றி நேரடியாகத் தலையிடுகிறது.

* 1.50 லட்சம் கோடி கடனுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகி மூழ்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.

* 14,314.76 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையில் தமிழகம் வழிதவறித் திண்டாடுகிறது.

* 44,176.36 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையில் நிதிநிலைமை திசைமாறித் திணறுகிறது.

* மக்கள் தலையில் 3,97,495.96 கோடி ரூபாய் கடனைச் சுமத்திக் கலக்கம் அடைய வைத்திருக்கிறது.

* ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்காமல், கண்ணெடுத்துப் பார்க்காமல், அலட்சியப்படுத்தி - அல்லல்படுத்தி அராஜகம் செய்கிறது.

* காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத பரிதாப நிலையில் மாநில சட்டம் - ஒழுங்கு படுதோல்வி கண்டிருக்கிறது.

* தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கிப் பரவிட அனுமதித்து விட்டது.

* ஆவின் பால் விலையை உயர்த்திய அரசு - இப்போது தனியார் பால் விலை உயர்வையும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து - ஏழை எளிய மக்களை, குழந்தைகளை, முதியோரை துயரத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

* வேலை இல்லாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதில் அகில இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம் என்ற மிகுந்த அவல நிலையை உருவாக்கியுள்ளது.

* 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துடன் விபரீத விளையாட்டு நடத்துகிறது.

* குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக ரீதியில் அமைதியான அறப்போராட்டங்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், மக்கள் மீது அநியாயமாக வழக்கு - அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது.

* புத்தகக் கண்காட்சியில் கூட அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்க விடாமல், கருத்துச் சுதந்திரத்தின் கதவைச் சாத்தி, போலீஸ் மூலம் அடக்குமுறை ஆணவம் படமெடுத்தாடுகிறது.

* உள்ளாட்சித் தேர்தலில் ஊரறிய அராஜகமும், அதிகார துஷ்பிரயோகமும் செய்து - தேர்தல் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்துவிட்டது.

இவை போன்ற எண்ணற்ற தோல்விகளால், மாநிலத்தின் நலனும் - வளர்ச்சியும் - வாழ்வும் குன்றிவிட்டன.

எனவே, மக்கள் விரோத - தமிழக உரிமைகளை சுய லாபத்திற்காகத் தாரை வார்க்கிற - ஊழல் சகதியில் மூழ்கிக் கிடக்கின்ற அதிமுக அரசின் முகமூடியை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அதன் மோசடி சொரூபத்தை ஊரெங்கும் உணர்த்திட இந்தச் செயற்குழு சபதம் ஏற்கிறது”.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in