

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமாக என்ன முடிவெடுத்துள்ளது என்பது தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தன் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
ஏற்கெனவே கடந்த விசாரணையின்போது பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை திருப்தி அளிக்காததால், புதிய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய விசாரணையில், ''புதிய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்து விட்டீர்களா? ஏனெனில் தற்போது எங்களிடம் உள்ள அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை'' என சிபிஐ தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர்.
சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட் ஜெனரல் பிங்கி ஆனந்த், ''ஏற்கெனவே உள்ள அறிக்கைதான். ஆனால் அதில் சில விளக்கங்களைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக வெடிகுண்டு விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
''அனைத்தும் வெளிநாடுகளில்தான் இருக்கிறது என்றால், உங்கள் கையில் என்னதான் இருக்கிறது? எப்போது புதிய அறிக்கையைத் தாக்கல் செய்யப் போகிறீர்கள்? மேலும் நிலவர அறிக்கை தவிர வேறு ஏதாவது கோரிக்கை உள்ளதா?'' சிபிஐ தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர்.
''கடைசியாக எப்போது நிலவர அறிக்கை தாக்கல் செய்தீர்கள்? ஏற்கெனவே தாக்கல் செய்தது சரியில்லை என்பதால்தான் புதிய நிலவர அறிக்கை கேட்டோம். புதிய அறிக்கையை எப்போது கொடுப்பீர்கள் எனத் தெரியவில்லை. எனவே உங்களுக்கு என்ன நிவாரணம் தான் வேண்டும் என நீங்களே கூறுங்கள்’’ என பேரறிவாளன் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர்.
''வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாகத்தான் குற்றச்சாட்டு. ஆனால் அதுவே முடிவாகாத நிலையில் ஏன் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என பேரறிவாளன் தரப்பில் பதிலளித்தனர்.
''அப்படியெனில் மீண்டும் வழக்கை புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறுகிறீர்களா? அப்படியெனில் அது முடியாது. ஏனெனில் வழக்கின் அடிப்படைத் தகுதிக்குள் நாங்கள் போக மாட்டோம்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
''பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு முடிவை எடுத்து ஆளுநருக்கும் அனுப்பி விட்டது. எனவே, இந்த விவகாரத்தில் தற்போது தமிழக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இவர்களின் விடுதலை தொடர்பாக உரிய தகுதி உள்ளவர்கள் முடிவெடுக்க உத்தரவிட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்'' என பேரறிவாளன் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமாக என்ன முடிவெடுத்துள்ளது என்பது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.